நினைவேந்தல்களை காரணம் காட்டி நடத்தப்படும் கைதுகளை நிறுத்துங்கள்!

நினைவேந்தல்களை காரணம் காட்டி நடத்தப்படும் கைதுகளை நிறுத்துங்கள்!

மரண நாளை நினைவு கூற அனுமதி அளிக்குமாறு ஊடகவியலாளர் தேவஅதிரன் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர் தேவஅதிரன் தனது சக ஊடகவியலாளர் விமலசேன லவ்குமாருக்காக இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். பாதுகாப்பு அமைச்சு, கல்குடா பொலிஸ் நிலையம் ஆகிய அரச நிறுவனங்களுக்கு எதிராக இந்த முறைப்பாட்டை அவர் பதிவு செய்துள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி நடைபெற்ற நினைவேந்தல் செயற்பாடுகளை காரணம் காட்டி தனது சக ஊடகவியலாளரின் மனித உரிமைகள் பாதுகாப்பு தரப்பினரால் மீறப்பட்டுள்ளதாக தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ள தேவஅதிரன், இனம், அரசியற்கொள்கை, மொழி ஆகிய பாகுபாடுகள் காரணமாக இந்த மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனித உரிமை மீறல் வாழைச்சேனை- நாகவத்தை பகுதியில் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவவம் குறித்து முறைப்பாட்டில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
“கடந்த 2021 மே 18ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்து நிபந்தனைகளுடனான பிணையில் சக ஊடகவியலாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பொலிஸ் நிலையத்தில் இவர் கையொப்பம் இட்டு வருகின்றார்”.
இந்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை நீதிமன்றத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.

இம்மனித உரிமை மீறல் சம்பவத்தை முறையிடுவதனூடாக நீதியையும், இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாமல் இருப்பதற்கான உறுதிப்பாட்டையும், நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கும், இறந்தவர்களை நினைவுகூர்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போரில் இறந்தவர்களை நினைவுகூருதல் தொடர்பான சம்பவங்களில் பலர் கைது செய்யப்படுவது அடிப்படை மனித உரிமை மீறலாகும். குறிப்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சம்பவங்களை காரணம் காட்டி வடக்கில் பாதுகாப்பு தரப்பு இந்த மனித உரிமை மீறலை மேற்கொண்டு வருகின்றது. இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதை தடுக்கும், தமது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதனை தடுக்கும் இவ்வாறான அடக்குமுறைகள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டும்.

போரில் இறந்தவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று கருதப்படும் இந்த சிந்தனை தொடர்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே இங்கு அனைவரின் கோரிக்கையாகும். தெட்டத்தெளிவாக இந்த செயற்பாடு இனம், மொழி சார்ந்த ஒரு அடக்குமுறையாகும். போரில் இறந்த படையினரை அரச மரியாதையுடன் விசேட வைபவங்களுடன் நினைவுகூரும் நாட்டில், தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காக போரில் இறந்தவர்களை நினைவுகூர மறுக்கப்படுதல் மிகவும் விசனத்திற்குரியதாகும்.

– ஊடகவியலாளர் தேவஅதிரன் கோரிக்கை

This post is also available in: English සිංහල