தகவல் அறிய உள்ள உரிமை மறுக்கப்படுகின்றது!
தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்த இடையூறு விளைவிக்கப்படுவதாக திருகோணமலையைச் சேர்ந்த ஊடகவியலாளர் க. சூரியகுமாரி (45) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
சீனக்குடா, தமிழ் பாடசாலை வீதி, 39ஃ8 என்ற முகவரியைச் சேர்ந்த அவர், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் திகதி தென்னைமரவாடி கிராமத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல் சம்பவம் தொடர்பாகவே அவர் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச சபை உட்பட குச்சவெளி பொலிஸ் பிரிவுக்கு எதிராக இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
அவர் இந்த முறைப்பாட்டில் கூறியுள்ளதாவது,
“குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தென்னைமரவாடி கிராமம் பற்றிய தகவல் ஒன்றைப் பெறுவதற்காக சென்ற வேளை தகவல்களை மக்களிடம் பெற முடியாமல் தடுக்கப்பட்டேன். அங்கு பொலிசாரின் பிரசன்னம் காரணமாக எனது பணியை செய்ய முடியவில்லை. அவர்கள் பல தடைகளை விதித்தும் இடையூறுகளை செய்தும் எனது ஊடகப் பணிக்கு இடைஞ்சல் செய்தனர்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனம் மற்றும் மொழி பாரபட்சம் காரணமாக தகவல்களைப் பெறுவதிலிருந்து தான் தடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான முறைப்பாட்டில், ஊடகத்துறை பாதுகாப்பு என்பது இக்காலகட்டத்தில் மிகவும் குறைவாக உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் செயற்பாட்டில் திட்டமிட்டு அதிகாரத்தரப்பினரால் இடையூறு விளைவிக்கப்படுகின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தகவல் அறியும் சட்டத்தினைப் பயன்படுத்தும் போது அதற்கு எதிராக பல நடவடிக்கைகள் அதிகார தரப்பினரால் முன்னெடுக்கப்படுகின்றது. இது மக்களுக்கு எதிரான ஓர் செயற்பாடாக அமைவதுடன், மனித உரிமைகளை மீறும் செயலாகவும் அமைகின்றது என்று கூறினார்.
– ஊடகவியலாளர் சூரியகுமாரி விசனம்
This post is also available in: English සිංහල