மொழிப் பிரச்சினையினால் அநீதிக்குள்ளாகும் அப்பாவி மக்கள்!
கால்நடை மேய்ப்பவர் ஒருவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதில் ஏற்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பில் ஊடகவியலாளர் ஆர்.ஜீவகன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
மன்னார், அடம்பன், ஆண்டாங்குளம் என்ற முகவரியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஆர். ஜீவகன் (32) இவ்விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கடந்த மார்ச் 6ம் திகதி 2022 அன்று முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார்.
வனசீவராகள் திணைக்களத்தின் எல்லைக்குள் கால்நடை மேய்ப்பதாகக் கூறி கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது திணைக்களத்தின் எல்லைக்குள் மரம் வெட்டியதாக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதன் மூலம் அந்நபரின் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வனவளத்திணைக்களம், வனசீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றை சேர்ந்த மாவட்ட அதிகாரிகளுக்கு எதிராக இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் சிறுநாவற்குளம் பகுதியில் 2022ம் ஆண்டு பெப்ரவரி 06ம் திகதி இடம்பெற்றதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொழி மற்றும் நிர்வாக குறைபாடுகள் இவ்வாறான சம்பவங்களுக்கு காரணம் என்று ஜீவகன் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும் இவ்வாறான சம்பவங்கள் மன்னார் பகுதியில் அதிகளவில் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டிய அவர், இதனால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக அப்பாவி பொதுமக்களை இலக்கு வைத்து பணம் பறிக்கும் நோக்கத்துடன் இவ்வாறான காரியங்களில் பலர் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 7 ஆண்டுகளாக ஊடகவியலாளராகக் கடமையாற்றி வரும் ஜீவகன், சிற்சில அரச உத்தியோகத்தர்கள் அப்பாவி பொதுமக்களிடம் பழிவாங்கும் உணர்வுடன் இவ்வாறு நடந்துகொள்வது மிகவும் வருத்தத்திற்குரியது என்றும் குறிப்பிட்டார்.
இவ்வாறான மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்களை அறிந்துகொண்டாலும் அவற்றை பகிரங்கமாக எழுத முடியாதுள்ளதாகவும், ஏனெனில் பாதிக்கப்படுபவர்களின் விபரங்கள் அடையாளப்படுத்தப்படுவதனால் அவர்கள் மென்மேலும் அடக்குமறைகளுக்கும், பழிவாங்கல்களுக்கும், மிரட்டல்களுக்கும் உள்ளாக நேரிடும் என்று ஜீவகன் கருத்துத் தெரிவித்தார். மொழிப்பிரச்சினை காரணமாக தங்கள் தரப்பு நியாயங்களை முன்வைக்க முடியாமலும் பலர் அல்லலுறுவதாகவும் அவர் கூறினார். இதேவேளை பொதுமக்களுக்கு இழைக்கப்படும் இவ்வாறான அநீதிகளை செய்திகளாக வெளியிடும் ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தலுக்குள்ளாகின்றனார். குறிப்பாக மணல் அகழ்வு, காடழிப்பு பற்றி செய்திகளை வெளியிடும் போது இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான விடயங்களைக் கருத்திற்கொண்டு மனித உரிமைகள் ஆணைக்குழு சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு எதிரான இவ்வாறான அநீதிகளில் தலையிட்டு நியாயம் பெற்றுத்தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
– ஊடகவியலாளர் ஆர்.ஜீவகன்
This post is also available in: English සිංහල