சட்டவிரோத மணல் அகழ்வு முறைப்பாடு இதுவரை விசாரிக்கப்படவில்லை!
சட்டவிரோத மண் அகழ்வு சம்பந்தமான முறைப்பாடு தொடர்பில் இதுவரை விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை என்று ஊடகவியலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
கிளிநொச்சி முரசுமோட்டை, பழைய கண்டி வீதி, 03ம் பிரிவை வசிப்பிடமாகக் கொண்ட பாஸ்கரன் (47) கிளிநொச்சி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராகவும், பல்வகை முறைப்பாட்டுப் பிரிவுக்கு எதிராகவும் இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.
மனித உரிமைகள் மீறல் நடைபெற்ற காலப்பகுதியாக 2022 ஜனவரி 28 மற்றும் மார்ச் 3 ஆகிய தினங்களைக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த மனித உரிமை மீறலுக்கான காரணம் செய்தி அறிக்கையிடல் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
தொலைபேசி உரையாடலையும் அவர் கண்கண்ட சாட்சியாக பதிவு செய்துள்ளார்.
2022 ஜனவரி 28ம் திகதியும், 2022 மார்ச் மாதம் 3ம் திகதி ஆகிய இரு தினங்களிலும் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வரும் நபர் ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக இவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் பல்வகை முறைப்பாட்டு பிரிவால் டிப்பர் வாகனம் தொடர்பில் இரு முறைப்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை எவ்விதமான விசாரணைகளும் இடம்பெறவில்லை என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதேசத்தில் நிகழும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் அப்பகுதிக்கு பொறுப்பாக உள்ள பொலிஸ் நிலைய அதிகாரிகள் மௌனம் காப்பது மிகவும் கவலைக்குரியதாகும். அதேநேரம் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை புலனாய்வு செய்து அறிக்கையிடும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பினையும் கேள்விக்குட்படுத்தும் விடயமாகவும் இது உள்ளது. சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் கும்பல்களினால் ஊடகவியலாளர்கள் இலக்கு வைக்கப்படலாம். இது அவர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். அத்துடன் அவர்கள் சார்ந்த குடும்ப உறவுகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி விடும்.
இந்நிலையில் இவ்வாறான சம்பவங்களை அறிக்கையிடும் போது ஏற்படும் அச்சுறுத்தல்களையும், மிரட்டல்களையும் எதிர்கொள்ளும் போது மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடுவது தவிர வேறு வழிகள் இல்லை என்று பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.
அதேநேரம் மனித உரிமைகள் ஆணைக்குழு இவ்விடயத்தில் விரைவாக தலையிட வேண்டும் என்பதும் இவர் தரப்பு கோரிக்கையாக உள்ளது.
சுற்றாடலுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பின் அசமந்தப் போக்கும், பாராமுகமும் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை ஊக்குவிக்கும் செயலாகவே துரதிருஸ்டவசமாக அமைந்துவிடுகின்றது. ஊடகவியலாளர்களும் மக்களும் நியாயத்தின் பக்கம் நிற்க சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய தரப்போ அநியாயத்தின் பக்கம் நின்று துணை போவது மிகவும் துயராமான விடயம் என்று இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்த சட்டவிரோத செயற்பாடு தொடர்பில் சாட்சியங்களுடன் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிசார் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காதது கண்டிக்கத்தக்கது என்றும் முறைப்பாட்டாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
– ஊடகவியலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன்
This post is also available in: English සිංහල