ஊடகவியலாளர்களின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் உப்புவெளி பொலிசார்!

ஊடகவியலாளர்களின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்
ஏற்படுத்தும் வகையில் செயற்படும் உப்புவெளி பொலிசார்!

செய்தி ஒன்று தொடர்பில் பொலிசாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளியாக இணைக்கப்பட்டதனால் எனது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் அலியார் முகமட் ஹீத் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
உப்புவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராகவே அவர் இந்த முறைப்பாடடை செய்துள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சட்டங்களுக்கு உட்பட்டும், 1978ம் ஆண்டு குடியரசு யாப்பின் 14வது பிரிவின் கீழுள்ள அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் சுதந்திரம் உடைய ஊடகவியலாளராகிய என்னை பொலிசார் இவ்வாறு வழக்கு ஒன்றில் குற்றவியல் சட்டத்தின் கீழ் இணைத்துக் கொண்டமை ஊடக சுதந்திரத்திற்கு பங்கம் விளைவிப்பதாக அவர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருகோணமலை, சாரதா வீதி, 26/1 என்ற முகவரியில் வசிக்கும் இவர், இலங்கை அரசாங்கத்தின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ள ஹிரு செய்திகள், ஸ்வர்ணவாஹினி, தெரண, சுப்ரீம் டி.வி ஆகிய ஊடகங்களில் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டு ஊடகவியலாளராக பணியாற்றி வருகின்றார்.

இந்த முறைப்பாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
“திருகோணமலை உப்புவெளி பொலிசாரினால் கடந்த 2021- 08- 05 அன்று வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்டதன் அடிப்படையில் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த வேளையில், கடந்த ஆனி மாதம் இடம்பெற்ற செய்தி அறிக்கையிடல் ஒன்று தொடர்பில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் குற்றவியல் சட்டத்திற்கு ஒவ்வாத வகையில் பொலிசாரால் வழக்கு (BR/629/01/PC/21) ஒன்றில் குற்றவாளியாக இணைக்கப்பட்டுள்ளேன்.

அத்துடன் இது போன்றே குறித்த வழக்கில் கடந்த 25-08-2-2021ம் திகதி திருக்கோணமலையைச் சேர்ந்த ஊடகவியலாளர் சி.ஹயக்கிரிவன் அவர்களும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளமை எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.”.

இது தொடர்பில் சரியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, ஊடக சுதந்திரத்திற்கு பங்கம் விளைவிக்கக் கூடிய இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

– ஊடகவியலாளர் அலியார் முகமத் ஹீத்

 

This post is also available in: English සිංහල