முன்னாள் போராளி என்பதால் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றேன்!
முன்னாள் போராளி என்ற ஒரே காரணத்திற்காக புலனாய்வுப் பிரிவினாரால் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுவதாக ஊடகவியலாளர் சி. யோகேஸ்வரன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளார். இதனால் தனது மனித உரிமைகள் மிக மோசமாக மீறப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
சித்தங்கேணி, வட்டு கிழக்கு என்ற முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர் சி.யோகேஸ்வரன் (42) ‘நான் ஒரு முன்னாள் போராளி. என்னிடம் தொடர்ந்து தொலைபேசியில் தொடர்ந்து தகவல் கேட்பது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது’ என்று தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இந்த அச்சுறுத்தல்கள் தொடர்பான ஆவண சாட்சியங்கள் முகப்புத்தக பக்கத்தில் பதிவுகளாக உள்ளதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த அச்சுறுத்தல்களினால் தனது சுய பாதுகாப்பு தொடர்பில் அச்சமடைந்துள்ளதாகவும், இதனால் தனக்கும் தன் குடும்ப உறவுகளுக்கும் பாதுகாப்பு தருமாறும் அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த முன்னாள் போராளிகள் பலர் புனர்வாழ்வு பெற்று இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ள நிலையில் தொடர்;ச்சியாக புலனாய்வுப் பிரிவினரால் அவர்கள் கண்காணிக்கப்படுவதும், தகவல்களை தருமாறு அவர்களை தொடர்ச்சியாக வற்புறுத்தப்படுவதும் பரவலாக இடம்பெற்று வருகின்ற நிலையில் யோகேஸ்வரன் போன்ற ஊடகவியலாளர்கள் எப்பொழுதும் புலனாய்வுப் பிரிவினரால் குறி வைக்கப்பட்டவர்களாகவே உள்ளனர். இதனால் அச்சுறுத்தல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகும் ஆபத்தை எதிர்கொள்ளும் தரப்பினராக இவர்கள் உள்ளனர். முன்னாள் போராளி என்பதால் விசாரணைகள் மற்றும் தகவல்களைப் பெறுதல் போன்ற விடயங்களைக் காரணம் காட்டி புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் அடிக்கடி தொந்தரவுக்குள்ளாக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் போராளி என்ற காரணத்திற்காக இவரது ஊடகக் கடமைகளை செய்ய முடியாத ஓர் அடக்குமுறையான நிலைமையை இவர் எதிர்கொள்கின்றார். அவருடன் தொடர்பில் இருப்பவர்களும், அவரை பல்வேறு பணிகளுக்காக அணுகுபவர்களும் புலனாய்வுப் பிரிவினரால் குறி வைக்கப்படும் ஆபத்தான நிலையும் இங்கு காணப்படுகின்றது.
போருக்கு பின்னரான இன்றைய சூழலில் முன்னாள் போராளிகள் பலர் இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். எனினும் இவர்களை இன்னும் பயங்கரவாதிகள் என்ற கண்ணோட்டத்தில் வேறுப்படுத்தி வைத்து கண்காணித்துக் கொண்டு பல்வேறு செயற்பாடுகளை பாதுகாப்பு என்ற காரணத்தை முதன்மைப்படுத்தி புலனாய்வுப் பிரிவினரும், பாதுகாப்பு தரப்பினரும் முன்னெடுத்து வருகின்றனர். இது அப்பட்டமானதொரு மனித உரிமை மீறல் செயற்பாடாகும்.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் சம்பவங்கள் நிகழும் போதும் விசாரணைக்கு என்று இவர்கள் சம்பந்தமே இல்லாமல் அழைத்துச் செல்லப்படுவதும், போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பத்தாண்டுகள் கடந்துள்ள நிலையில் விடுதலைப்புலிகளுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் அறிய தொலைபேசிகளினூடாகவும், நேரடியாகவும் புலனாய்வுப் பிரிவினர் இவர்களை அடிக்கடி அணுகுவதும் இவர்கள் மத்தியில் அச்சுறுத்தலான சூழ்நிலையையே ஏற்படுத்தியுள்ளது.
இந்த அடிப்படையில் ஊடகவியலாளர் யோகேஸ்வரன் போன்ற முன்னாள் போராளிகள் கடந்த காலத்தின் செயற்பாடுகளுக்காக இவ்வாறு தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதும், தொந்தரவுக்குள்ளாக்கப்படுவதும் மிக மோசமான நிலைமையாகும். இந்த அழுத்தங்கள் தொடர்ச்சியாக பாதுகாப்பு தரப்பினரால் பிரயோகிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்கள் அடிப்படை மனித உரிமைகளையும், சுதந்திரத்தையும் இழந்தவர்களாகவே ஊடகப் பணிகளை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மன உளைச்சலுக்கு மத்தியிலும் மேற்கொண்டு வருகின்றனர்.
– ஊடகவியலாளர் சி. யோகேஸ்வரன்
This post is also available in: English සිංහල