நிதி முறைகேடுகளைத் தடுக்க அரச ஊழியர்களுக்கு வருடாந்தம் கட்டாயம் இடமாற்றல் வழங்கப்பட வேண்டும்!
அரச ஊழியர்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்றுவதால் பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுவதாகவும், அவர்களுக்கு இடமாற்றம் வழங்க தலையிடுமாறு அப்துல் அசீஸ் யசூர் (49) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியா, வேப்பங்குளம், பட்டாணிச்சூர் என்ற முகவரியைச் சேர்ந்த இவர் வவுனியா சமுர்த்தி திணைக்களத்திற்கு எதிராகவும், அத்திணைக்களத்தின் பணிப்பாளருக்கு எதிராகவும் இந்த முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.
அரசியற்கட்சிகளின் அல்லது ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அபிவிருத்திக்குழு தலைவர்களின் தலையீட்டின் காரணமாக வருடாந்த இடமாற்றம் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. இதனால் பல வருடங்களாக ஒரே இடத்தில் அரச ஊழியர் ஒருவர் பணியாற்றும் போது நிதி மோசடிகளுக்கும், பல்வேறு முறைகேடுகளும் இடம்பெறுவதாக அவர் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான அரச ஊழியர்களினால் சாதாரண பொதுமக்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், வவுனியாவில் 2020- 2022 காலப்பகுதியில் பல மனித உரிமை மீறல்கள் இதன் காரணமாக நிகழ்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான கண்கண்ட சாட்சியங்களும், ஆவண சாட்சியங்களும் இருப்பதாகவும் அவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
அரச நிர்வாகத்தில் இடம்பெறும் அரசியற் தலையீடுகள் காரணமாக மக்களுக்குரிய சேவைகளை பாரபட்சமின்றி வழங்க முடியாத நிலைமை காணப்படுகின்றது. இந்த பாரபட்சமான நிலை காரணமாகவும் முறைகேடுகள் காரணமாகவும் மக்கள் அரச சேவைகளை உரியவாறு பெற்றுக்கொள்வதில் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர். அத்துடன் அரச சேவை தொடர்பில் அவநம்பிக்கையற்றவர்களாகவும் உள்ளனர்.
சேவைகளைப் பெற்றுக்கொள்ள வரும் அப்பாவி பொதுமக்கள் நியாயமற்ற பல காரணங்களுக்காக துன்புறுத்தப்படுவதும் நிகழ்கின்றது என்று இந்த முறைப்பாட்டினூடாக தெரிய வருகின்றது. சமுர்த்தி போன்ற வறுமை ஒழிப்புத்திட்டங்களுக்காக பணியாற்றும் அதிகாரிகள் பொதுமக்களுக்கு சேவை செய்வதனை முதன்மை கடமையாகக் கொள்ளாது உதவித்தொகையில் நிதி முறைகேடுகளை செய்வதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று குறிப்பிடப்படுகின்றது.
இதனால் அரச நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகள் இன்றி பணிகள் இடம்பெற வேண்டும். மக்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிகள், வாழ்வாதாரம் என்பன உரிய முறையில் கிடைக்க வழியேற்படுத்தப்பட வேண்டும் என்று அப்துல் அசீஸ் யசூர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
– அப்துல் அசீஸ் யசூர்
This post is also available in: English සිංහල