ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுங்கள்!

ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுங்கள்!

கிண்ணியா படகு விபத்தின் போது செய்தி சேகரிக்க சென்ற வேளை இனந்தெரியாத இளைஞர் குழுவால் தாக்கப்பட்டதாக பிராந்திய ஊடகவியலாளர் ஏ.எல்.றிபாய்தீன் (60) மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளார்.

திருகோணமலை, லவ்லேன், இல 1 என்ற முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட இவர், பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராகவும், பிரதேச செயலகத்திற்கு எதிராகவும், திருகோணமலை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர், கிண்ணியா பிரதேச செயலாளர் ஆகியோருக்கு எதிராகவும் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளார்.
அவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாவது:

“22-11-2021 அன்று கிண்ணியாவில் இடம்பெற்ற படகு விபத்து சம்பவத்தின் போது பிராந்திய செய்தியாளரான நான் ஜமாலியா பள்ளிவாசல் தலைவருடன் வாகனம் ஒன்றில் பயணம் செய்து கொண்டு வாகனத்திலிருந்துவாறு சம்பவ நிகழ்வுகளை வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தபோது இனம் தெரியாத இளைஞர் குழு எனது பணிக்கு இடையூறு விளைவித்ததுடன், எனது கழுத்தை நெரித்து தொலைபேசியை பறித்தெடுக்க முயற்சித்தனர். இந்த சம்பவம் பொலிசார் முன்னிலையில் நடைபெற்றது. மற்றும் எனது வாகனத்தை சரமாரியாக தாக்கினர். அடையாள அட்டையைக் காண்பித்ததும் என்னை விட்டுவிட்டனர்”. என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிர்வாகக் குறைபாடும், அரசியற் கொள்கையும் இதற்கு காரணம் என்று இந்த முறைப்பாட்டில் றிபாய்தீன் குறிப்பிட்டிருக்கின்றார். இந்த சம்பவம் தொடர்பில் ஒளிப்பதிவும், கண்கண்ட சாட்சிகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த முறைப்பாட்டினூடாக ஊடக செயற்பாட்டிற்கான சுதந்திரம் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

– ஊடகவியலாளர் றிபாய்தீன் கோரிக்கை

This post is also available in: English සිංහල