முகநூலில் பிரபாகரனின் புகைப்படத்தினை பதிவு செய்ததால் கைது!
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை முகநூலில் பதிவு செய்த குற்றச்சாட்டில் பொலிஸார் வாகரையைச் சேர்ந்த கு.விஜயதாச என்பவரை கைது செய்துள்ளனர் என்ற முறைப்பாடு ஒன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாகரை பொலிசாரினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என மட்டக்களப்பு ஊடகவியலாளர் தேவஅதிரன் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். பொலிஸ் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சுக்கு எதிராக இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கைது சம்பவம் 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதி நடைபெற்றுள்ளது. இனம் மற்றும் அரசியற்கொள்கை காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனிமனித கருத்துச் சுதந்திரத்தை பாதிக்கும் இவ்வாறான சம்பவங்கள் பாதுகாப்பு தரப்பினரால் பாரியளவில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. குறிப்பாக மாவீரர் தினம் அனுட்டிக்கப்படும் நவம்பர் மாதம் இவ்வாறான கைதுகள் பரவலாக வடக்கு கிழக்கில் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக இணையத்தங்களில் சமூக ஊடகங்களில் இவ்வாறான தனிமனித உரிமைகளை மீறும் வகையில் பாதுகாப்பு தரப்பினர் சமூக ஊடகங்களைக் குறிவைத்து செயற்படுவது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும் என்றே கூற வேண்டியுள்ளது. இவ்வாறு தொடர்ச்சியாக சமூக ஊடக செயற்பாடுகள் பாதுகாப்பு தரப்பினரால் கண்காணிக்கப்படுவது எந்தளவுக்கு இந்நாட்டில் சுதந்திரம் உள்ளது என்பதனை கேள்விக்குட்படுத்துகின்றது.
அரசினால் தடை செய்யப்பட்ட இயக்கத்தை மீளுருவாக்கம் செய்யும் செயற்பாடுகள் என்று காரணம் காட்டி அப்பாவி பொதுமக்களும், ஊடகவியலாளர்களும் இவ்வாறு அச்சுறுத்தலாக்கப்படும் செயற்பாடுகளும், அவர்களை கைது செய்யும் செயற்பாடுகளும் ஒட்டுமொத்தமாக மனித உரிமை மீறல்களாகும். அதுவும் ஒரு குறிப்பிட்ட இனத்தை மட்டும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் இவ்வாறான அட்டூழியங்கள் நிறுத்தப்படுவது அவசியமாகும்.
-ஊடகவியலாளர் தேவஅதிரன் முறைப்பாடு
This post is also available in: English සිංහල