மனித உரிமை செயற்பாடுகளில் ஈடுபட்டதால் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றேன்!

மனித உரிமை செயற்பாடுகளில் ஈடுபட்டதால் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றேன்!

மனித உரிமை செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதால் பாதுகாப்பு தரப்பின் அடக்குமுறைக்குள்ளாவதாக மட்டக்களப்பைச் சேர்ந்த பாரதிதாசன் (64) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

மட்டக்களப்பு இணையம் என்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் தலைவராக 2019- 2021 காலப்பகுதிகளில் கடமையாற்றிய போது முன்னெடுக்கப்பட்ட மனித உரிமைகள் செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்தனர் என்று அவர் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு, அதிகார் வீதி, 15/4 என்ற முகவரியில் வசிக்கும் இவர், மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர், புலனாய்வு பொறுப்பதிகாரி ஆகியோருக்கு எதிராக இந்த முறைப்பாட்டை வைத்துள்ளார்.
அரச சார்பற்ற நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் தற்போதும் அவ்வாறே தொடர்ந்து கொண்டிருப்பதாக அவர் தனது முறைப்பாட்டில் மேலும் கூறியுள்ளார்.

2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 06ம் திகதி மனித உரிமை மீறல் இடம்பெற்றதாகக் குறிப்பிட்ட அவர், மனித உரிமைகள் சம்பந்தமான செயற்பாடுகளில் ஈடுபடுவதே பாதுகாப்பு தரப்பின் இந்த செயற்பாடுகளுக்கு காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ளார். மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினைகளில் இதுவும் ஒன்று என்று அவர் கூறினார்.

தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுதல், தொடர் விசாரணைகள் என்று பலவிதமான அழுத்தங்கள் பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்படுகின்றமை தங்கள் செயற்பாடுகளுக்கு பெரும் இடையூறு என்று அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன் மனித உரிமை செயற்பாட்டாளர்களை அடக்கி ஒடுக்குவதனூடாக மனித உரிமை மீறல்கள் அம்பலமாவதை தடுக்க முடியும் என்று பாதுகாப்பு தரப்பு கருதுகின்றது. இது மனித உரிமைகளை மதிப்பதாக சர்வதேசத்திற்கு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கின்ற இலங்கைக்கு ஆரோக்கியமானதாக இருக்கும் என்று கூற முடியாது என்றும் அவர் கூறினார்.

எதிர்காலத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகளில் புலனாய்வுப் பிரிவினரின் தலையீடு இல்லாதிருப்பதனை மனித உரிமைகள் ஆணைக்குழு உறுதி செய்து அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று இந்த முறைப்பாட்டினூடாக அவர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

– மட்டக்களப்பு மனித உரிமை செயற்பாட்டாளர் பாரதிதாசன்

This post is also available in: English සිංහල