பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்!
இராணுவத்தால் அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இது அம்மக்களின் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயலாகும் என்று மாங்குளத்தைச் சேர்ந்த சண்முகம் தவசீலன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
மாங்குளம் பனிச்சங்குளம் முகவரியில் வசிக்கும் இவர், இலங்கை இராணுவத்திற்கு எதிராகவும், முல்லைத்தீவு பாதுகாப்புப்படை கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்கவுக்கு எதிராகவும் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்து மீள்குடியேறிய போது மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு இராணுவம் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 12 வருடங்கள் கடந்த நிலையில் இராணுவத்தினர் அவர்களது நிலத்தை இன்னும் விடுவிக்காமல் இருப்பது அந்த மக்களின் மனித உரிமைகளை மிக மோசமாக மீறும் செயலாகும் என்று அவர் முறைப்பாட்டில் கூறியுள்ளார். மனித உரிமை மீறல் நடைபெற்ற இடமாக கோப்பாபுலவை குறிப்பிட்டுள்ள அவர், 2009ம் ஆண்டு மனித உரிமை மீறல் நிகழ்ந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து தரப்பினருக்கும் அறிவித்தும் பலன் இல்லை என்று தெரிவித்துள்ள அவர், முல்லைத்தீவு நீதிமன்றில் 2018ம் ஆண்டு வழக்கு பதிவாகியுள்ள போதிலும். இதுவரை மக்களுக்கான தீர்வு எட்டப்படவில்லை என்றும், மக்களின் நிலங்களை விடுவிக்க மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.
– சண்முகம் தவசீலன்
This post is also available in: English සිංහල