துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்படலும் ஊடக செயற்பாட்டிற்கு இடையூறு செய்தலும்!

துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்படலும் ஊடக செயற்பாட்டிற்கு இடையூறு செய்தலும்!

செய்தி சேகரிக்கும் பணியின் போது துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக ஊடகவியலாளர் சுலக்ஷன் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

தொண்டைமனாறு, பிரதான வீதி என்ற முகவரியைச் சேர்ந்த ஊடகவியலாளரான ஜெ.சுலக்ஷன் (29) பொலிஸ் அதிகாரியினால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி கைது செய்ய முற்பட்டமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த மார்ச் 7ம் திகதி, 2022 அன்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருக்கின்றார்.

கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 2ம் திகதி இச்சம்பவம் இ;டம்பெற்றுள்ளது. செய்தி சேகரிக்க சென்ற வேளை பருத்தித்துறை நீதிமன்ற வாயிலில் வைத்து முரண்பட்ட பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி ஒருவர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் வைத்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி தன்னை கைது செய்ய முற்பட்டதாக முறைப்பாட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு அதிகார துஷ்பிரயோகம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

இந்த சம்பவத்திற்கு சாட்சியாக சி.சி.டி. காணொளி பதிவுகளை அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 2021ம் திகதி டிசம்பர் 3ம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற போதிலும் தனக்கு பாதுகாப்பையும், இச்சம்பவத்திற்கான நீதியையும் பெற்றுத் தருமாறும் அவர் முறைப்பாட்டில் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

செய்தி சேகரிக்க செல்லும் பணிகளின் போது ஊடகவியலாளர்களுக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்தும் செயற்பாடுகள் பாதுகாப்பு தரப்பினரால் பரவலாக மேற்கொள்ளப்படுவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் பலர் முறைப்பாடுகள் செய்து வருகின்றனர். இது ஒரு மனித மீறலாக உள்ளதுடன் எந்தவிதமான நியாயமான காரணங்களும் இன்றி முன்னெடுக்கப்படும் செயற்பாடாகவும் உள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் எதிர்ப்பு தெரிவிக்கும் போது ஊடகவியலாளர்கள் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்படுதல், தாக்கப்படுதல் அல்லது உயிராபத்து ஏற்படும் என்று கடுமையாக மிரட்டப்படுதல் ஆகிய அச்சுறுத்தல்கள் பாதுகாப்பு தரப்பினரால் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பிலும் முறைப்பாடுகள் பல பதிவாகியுள்ளன. இவ்வாறான செயற்பாடுகள் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் அவர்களின் பணிகளை முடங்க செய்யும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் அன்றி வேறில்லை.

ஊடகவியலாளர்களின் முதன்மை பணி மக்களுக்கு சரியான முறையில் செய்திகளை கொண்டு போய் சேர்ப்பதே. இதற்காக அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றி வருகின்றனர். இதற்காக அவர்கள் கொடுக்கும் விலையும் மிக மிக அதிகம். அதேவேளை மக்களுக்காக இந்த கடமையை செய்யும் ஊடகவியலாளர்களைத் தடுப்பதற்கு எவருக்கும் அதிகாரமும், உரிமையும் இல்லை எனலாம். போருக்கு பின்னர் வடக்கு பகுதியில் கடமையாற்றும் ஊடகவியலாளர்கள் ஒப்பீட்டளவில் பல்வேறு விதமான அச்சுறுத்தல்களையும் மனித உரிமை மீறல்களையும் எதிர்கொண்டு வருகின்ற நிலையில் சுலக்ஷன் போன்ற ஊடகவியலாளர்கள் ஊடகப் பணியை முழுமையாக ஆற்ற முடியாத துரதிருஷ்ட நிலையே உள்ளது.

இவ்வாறான சூழலில் சுய பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமான விடயமாக உள்ளதுடன், இந்த சம்பவத்திற்கான நீதியை நிலைநாட்ட எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என்பதனை உறுதிப்படுத்தும் உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்புகள் முன்னெடுக்க வேண்டும் என்பதே சுலக்ஷன் உட்பட ஒட்டுமொத்தமாக அனைத்து ஊடகவியலாளர்களினதும் முதன்மை கோரிக்கையாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

– ஊடகவியலாளர் ஜெ. சுலக்ஷன்

This post is also available in: English සිංහල