ஜனாதிபதி மைத்திரியுடன் இருக்கும் மகள் வீடு வந்து சேருவாளா?

படங்கள் | கட்டுரையாளர்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் (2015 ஜனவரி மாதம் 7ஆம் திகதி) முழு நாட்டு மக்கள் மனதிலும் பரபரப்பு, டென்ஷன். மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். நாளை யார் வெல்லப் போவது…? ஆனால், இறுதிப் போரில் காணாமல்போன – கடந்த 6 வருடங்களாக தனது மகளை தேடியழையும் தமிழ் தாய் ஒருவருக்கு மட்டும் சந்தோஷமான நாள் அன்று. இனிமேல் நிச்சயமாக தனது மகள் கிடைத்துவிடுவால் என்று.

அன்றைய தினம் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான தேர்தல் துண்டுப் பிரசுரங்களை பாதை வழியே வான் ஒன்றில் சென்ற சிலர் வீசிக்கொண்டு செல்கின்றனர். அதனை கொஞ்சமும் எட்டிக்கூட பார்க்காமல், “நமக்கெதுக்கு அது” என்று, பிரசுரங்களைப் பார்த்துக் கொண்டிருந்த மாணவர்களைக் கடந்து சென்ற அந்தத் தாயை அவளது மகன் அழைத்து பிரசுரத்தில் தன்னுடைய அக்கா இருப்பதைக் கூறுகிறான். உடனே வாங்கிப் பார்த்த தாயின் முகத்தில் சந்தோஷம், கண்ணீர், பயம் எல்லாம் கலந்தே வெளிப்படுகிறது. கடந்த 6 வருடங்களாக தேடிக்கொண்டிருந்த மகள் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இருப்பதை கண்டவுடன் மகள் கிடைத்துவிட்டதாகவே எண்ணினாள்.

“2015 தை மாதம் 7ஆம் திகதி வேன் ஒன்டுல வந்து கட்டு கட்டா நோட்டீஸ் போட்டுக்கொண்டு போயிருக்கினம். அந்த நேரம் கனக்க ஸ்கூல் பிள்ளையல் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தவையல். நான் விலத்திக்கொண்டுவர, என்ட மகன், “அம்மா அக்காச்சி நிக்கிறாள் படத்தில” என்டு சொன்னான், வாங்கிப் பார்த்தனான், படத்தில என்ட மகள், அவளேதான்.”

“இவருக்கும் சொல்லாம அப்படியே வீட்டுக்கு கொண்டு போய் வச்சிட்டன். அடுத்த நாள் வோட் எல்லாம் போட்டுட்டு வந்து உக்கார்ந்து இருக்கேக்க, மகன்தான் இவரிட்ட சொன்னான், “அம்மா அக்காச்சிட படத்த வச்சிருக்கா” என்டு. இவரும் பார்த்த பிறகுதான் இந்த விஷயத்த வெளியில சொன்னனான்” என்கிறார் ஜெயவனிதா.

IMAG2897

படத்தில் தனது மகள் இருப்பதைக் கண்டும் யாரிடம் நியாயம் கேட்பது, நியாயம் கேட்டால் தனது ஏனைய பிள்ளைகளுக்கும் பிரச்சினை ஏதும் வந்துவிடுமோ, அதுவும் நாளை (08.01.2015) மஹிந்த ராஜபக்‌ஷ வென்றால்…? என்ற அச்சத்தில் துண்டுப் பிரசுரத்தை அப்படியே மறைத்துவிடும் எண்ணம் எதுவும் ஜெயவனிதாவுக்கு இருந்திருக்கலாம்.

இறுதிப் போரின்போது வலுக்கட்டாயமாக படைசேர்ப்பில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் ஈடுபட்டிருந்தபோது ஜெயவனிதா தனது மூத்த மகளான காசிப்பிள்ளை ஜெரோமியை அவர்களின் கண்ணுக்கு பட்டுவிடாமல் ஒளித்தே வைத்திருந்தார். இருப்பினும், நாலாபுறமும் வந்துவிழும் ஷெல் வீச்சுகளால் அவரை மறைத்துவைத்திருக்க முடியவில்லை.

“அஞ்சு புள்ளகளையும் வச்சிக்கொண்டு அம்மாவும் அப்பாவும் இருந்தனாங்கள். அவங்க வயசு போன ஆக்கள்தானே. அப்போ ஷெல் விழத் தொடங்கிட்டு. கடைசி கட்டத்தில இயக்கமும் வலுக்கட்டாயமாக ஆக்கள புடிச்சதுதானே… பயத்தால எங்களுக்கு புரிம்பா ஒரு பங்கர், அவாவுக்கு புரிம்பா ஒரு பங்கர் வெட்டியிருந்தனான். ஷெல் வந்து விழத் தொடங்க அங்கிருந்து போக வேண்டிய நிலம. பக்கத்து பங்கர்ல ஷெல் விழுந்து ஒரு குடும்பமே செத்திட்டது. ஒருத்தரும் மிஞ்சல்ல” – பேச்சை நிறுத்திவிட்டு அமைதியானவர், அழ ஆரம்பித்தார். இறுதிப் போரில் எவ்வளவு கொடூரமாக மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை சொல்லிக்கொண்டே அழுதார்.

மீண்டும் அவர் அமைதியாகும் வரை காந்திருந்து விட்டு “மகளை யாரம்மா பிடித்தது? என்று கேட்டேன்.

“ஷெல் தாக்குதல் தொடர்ந்து இருந்ததால என்ன நடந்தாலும் பரவாயில்ல என்டு புறப்பட்டனான். அந்த நேரம்தான் புள்ளய புடிச்சவங்க. 2009 பங்குனி மாதம் நாலாம் திகதி முள்ளிவாய்க்காலில் வைத்துதான் புள்ளய புடிச்சவங்க. யாரு புடிச்சது என்டுதான் தெரியல்ல. ஆனா அவங்க இராணுவ உடுப்புதான் உடுத்தியிருந்தவங்க. நான் புள்ளய விடவேயில்ல. இறுக்கி கட்டிப்புடிச்சிக்கொண்டுதான் இருந்தனான். அடிச்சி, உதைஞ்சி என்னை விழுத்திவிட்டுதான் புள்ளய புடிச்சி வேன்ல போட்டுக்கொண்டு போனவங்க. இராணுவ உடுப்புதான் உடுத்தியிருந்தவங்க” என்றவரிடம், அவங்க எதுவும் பேசவில்லையா என்று கேட்க,

“ஒரு கதையும் பேச்சும் இல்ல, ஆ… ஊ… என்டு கத்துனவங்க. மற்றது அவங்க எல்லா கையிலயும் துவக்கு. இயக்கமும் துவக்கு கொண்டு வாரது… இவங்க கையிலயும் துவக்கு. எங்களுக்கு யாரென்டு தெரியாது. ஆனா என்ட புள்ள எங்கேயோ இருக்குமென்டுதான் நம்பி இருந்தனான்” என்கிறார் ஜெயவனிதா.

IMG_9751

தனது மகள் காணாமல்போனமை குறித்து பதிவு நடவடிக்கைகள், முறைப்பாடுகள் தெரிவிப்பதற்காக சென்ற சந்தர்ப்பங்களில் மகளை யார் பிடித்தது என்ற கேள்விக்கு பதில் கூறமுடியாமலே ஜெயவனிதா இருந்து வந்துள்ளார்.

“இதுவரைக்கும் காணாமல்போனவள் என்டுதான் பதிவுசெய்திருக்கிறேனே தவிர ஆமிதான் கைதுசெய்தது, இயக்கம்தான் புடிச்சது என்டு பதிவுசெய்யல்ல. முன்ன நான் போய் முறையிட்டா, ஆமி புடிச்சதென்டா, என்ன ஆதாரம் இருக்கு? ஆமின்ட பெஜ் ஏதும் வச்சிருக்கீங்களோ? இல்லையென்டா எந்த ஆமி என்டு ஆல காட்டுவீங்களோ? உங்கட ஆக்கள் எங்க கொண்டுபோய் சுட்டாங்களோ தெரியல்ல என்டு சொல்லுவினம்” என்று கூறும் ஜெவனிதா,

“இந்தப் படத்த கண்ட பிறகுதான், இவாட கையிலதான் மகள் இருக்கிறா என்டு தெரிந்துகொண்டனான். புதுசா வந்த ஜனாதிபதியோட இருக்கிறத கண்டதுக்கு பிறகுதான், இவையள்ட கையிலதான் பிள்ள இருக்கு என்டு ஆதாரம் கிடைச்சது” என்றவர்,

“சரி இயக்கம்தான் புடிச்சிருந்தாலும் இப்ப இருக்கிறது இவையின்ட கையிலதானே? ஆதாரம்தானே கேட்டனீங்கள்? இதோ படம் இருக்கு” – படத்தில் தனது மகள்தான் என்பதை உறுதியாகக் கூறுகிறார் ஜெயவனிதா.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டபோது காணாமல்போனோரின் உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர். வட மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டுமெனக் கோரி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் அலுவலத்தை முற்றுகையிட முயன்றபோது ஐவரை மட்டும் ஜனாதிபதியைச் சந்திப்பதற்காக அழைத்துச் செல்லலாம் என பொலிஸார் அறிவிக்க, அந்த ஐவருள் ஜெயவனிதாவும் இணைந்து கொண்டு ஜனாதிபதியைச் சந்திக்கப் புறப்பட்டார்.

படத்த காட்டி கால பிடித்து சரியா அழுதனான். படத்த ஜனாதிபதி வடிவா பார்த்தார். அவருக்கு டென்ஷன். உடனே விக்ஸ் எடுத்து பூசுறார்; படம் எடுக்காதேங்கோ; லைட் அடிக்காதீங்கோ என்டு சொல்றார். படத்த பார்த்து முடிய அவருக்கு வியர்த்திட்டு. வடிவா வச்சி பார்த்தார். சம்பந்தன் ஐயா வேண்டி பார்த்திட்டு கையுகுள்ள சுருட்டி வச்சிருக்கிற மாதிரி வச்சிருக்கேல்ல. பிள்ளையின்ர படத்தையும், நோட்டீஸையும் பார்த்திட்டு என்ன அழவேண்டாம் என்டு சொன்னார். இந்தப் புள்ள என்னோட இருக்கிறதால நல்லாதான் இருக்கும். கவலைப்படாதீங்க. விசாரணை செய்து விடுதலை செய்வோம் என்டு சொன்னார். “நீங்க ஏதோ எல்லாம் நினைச்சி அழுறீங்க. என்னோட இருக்கிறதால ஒன்டும் நடந்திருக்காது. என்ட பேரப்புள்ள மாதிரி” என்டு சொன்னார். அவர் யோசிச்சிக் கொண்டே இருந்தார்” – தமிழ் அரசியல் தலைவர்களை விட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவர் அதிகம் நம்பியிருப்பதை அவரது பேச்சில் காணமுடிந்தது.

ஜெயவனிதாவின் மகள் போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் காணாமல்போன இன்னும் மூவரும் அந்தப் படத்தில் இருக்கின்றனர். சந்திராணி என்பவர் தனது மகன் படத்தில் இருப்பதை அடையாளம் கண்டிருக்கிறார். ஏனைய இருவரையும் அடையாளம் கண்டுள்ள அவர்களது பெற்றோர்கள் தங்களுக்கும் உயிரோடு இருக்கும் ஏனைய பிள்ளைகளுக்கும் உயிராபத்து நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் பிள்ளைகளைத் தேடுவதை நிறுத்தியிருக்கின்றனர்.

ஜெயவனிதாவின் மகள் மற்றும் சந்திராணியின் மகன் இருவரையும் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்திருக்கின்றனர் என்ற செய்திகள் அண்மையில் வெளியாகியிருந்தது. பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்துக்கு மேற்படி இருவரையும் அழைத்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், தான் எதற்காக அழைக்கப்பட்டிருந்தேன் என்பது கூட அறியாதவராக ஜெயவனிதா இருக்கிறார். தனது மகளை கண்டறிவது குறித்துதான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் உங்களுடைய மற்றும் சந்திராணியின் மகள் குறித்த விசாரணைகளை ஆரம்பித்திருக்கின்றனர் என்று நான் அவர்களிடம் கூறினேன். அப்போதுதான் அவருக்கு விளங்கியது.

ஜெயவனிதாவுக்கு விசாரணையின்போது நடந்தவைகள் நினைவுக்கு வருகின்றது. ஜனாதிபதி இருக்கும் படத்தை பொடோஷொப் செய்திருக்க வாய்ப்பிருப்பதாக விசாரணை அதிகாரிகள் ஜெயவனிதாவிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

“ஜனவரி மாதம் 13ஆம் திகதி விசாரணைக்காக போனனான். நாலாம் மாடியில சொல்லினம், சிலவேளை ஜனாதிபதியின்ட படத்தில உங்கட பிள்ளையின்ட படத்த புகுத்தியிருக்கினம் என்டு. என்ட புள்ள ஸ்கூல் யுனிபோர்ம் உடுத்தி படம் எடுத்ததே இல்ல, அப்படி இருக்கும்போது எப்படி புகுத்துறது” – இப்படியான கேள்விகளால் நம்பிக்கை இழந்திருந்தாலும் நிச்சயமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மகளை தேடிக்கண்டுபிடித்துக் கொடுப்பார் என்ற நம்பிக்கை அவரிடம் இருக்கிறது.

“அன்டைக்கு ஊர்ல வந்தும் விசாரிச்சிரிக்கினம். படத்தில இருக்கிறவ என்ட மகளா? எந்த ஸ்கூல்ல படிச்சவ? என்டெல்லாம் கேட்டிருக்கினம். இதுல ஜனாதிபதி தலையிட்டிருக்கார் என்டுதான் நான் நினைக்கிறன். அதனால, கூடிய சீக்கிரத்தில மகள் வீடு வந்து சேருவா, புதிய ஜனாதிபதி மேல எனக்கு நம்பிக்க இருக்கு” – ஜெயவனிதாவின் கண்கள் பேசுகின்றன.

IMG_9752

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015 ஜனவரிக்கு முன் அமைச்சராக பாடசாலை நிகழ்வொன்றுக்கு சென்றிருந்தபோது இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. கார்டூனிஸ்ட்டும் ஊடகவியலாளருமான பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டு, அதனோடு தொடர்புடைய அத்தனை ஆவணங்களையும் அழித்துவிட்ட நிலையில் நல்லாட்சி மைத்திரி – ரணில் அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். எந்த வாகனத்தில் கடத்தப்பட்டிருக்கிறார், எங்குவைத்து கடத்தப்பட்டிருக்கிறார், எங்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கிறார் என்ற விடயங்கள் எல்லாம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் புலனாய்வு செய்யப்பட்டிருக்கிறது.

அதேபோன்று, சொல்லப்போனால் அதைவிட இலகுவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இருக்கும் மாணவர்களை கண்டுபிடிக்கக் கூடிய வழிகள் இருந்தும், “நல்லாட்சி அரசாங்கம் காணாமல்போன தமிழர்கள் குறித்தும் விசாரணைகளை ஆரம்பித்திருக்கிறது” என்று அடுத்த ஜெனிவா அமர்வில் சர்வதேசத்திடமும், காணாமல்போன உறவுகளை வீடுவந்துசேர்ப்பார்கள் என்று நம்பி வாக்களித்த மக்களுக்கும் மைத்திரி – ரணில் அரசாங்கம் தமிழர் மீது உண்மையான அக்கறை கொண்டிருப்பதாகவே காட்டுகிறது.

இந்நாட்டை மகிழ்ச்சியாக வாழும் மக்களைக்கொண்ட ஒரு நாடாக கட்டியெழுப்புவதற்கு நல்லாட்சி மற்றும் நல்லிணக்கம் ஆகிய சொற்களை யதார்த்தமாக்குதல் வேண்டும் என்றும் – நாட்டின் எதிர்காலமானது நல்லாட்சி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றைப் பிரயோக ரீதியில் நடைமுறைப்படுத்துவதிலேயே தங்கியுள்ளது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கூறியிருந்தார்.

பிரயோக ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கு தெற்கில் உள்ள மனங்களை மட்டும் சரிசெய்வதில் எந்தவித பயனுமில்லை. அதற்கு வடக்கும் தயாராகவேண்டும். தெற்கில் நல்லிணக்கத்துக்கான கைநீழும்போது வடக்கு பின்வாங்குகின்ற ஒரு சூழ்நிலையையே தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது.

செல்வராஜா ராஜசேகர்