நிதி மோசடி தொடர்பான பழிவாங்கலில் மீறப்படும் மனித உரிமைகள்!

நிதி மோசடி தொடர்பான பழிவாங்கலில் மீறப்படும் மனித உரிமைகள்!

 

2011ம் ஆண்டு வங்கி ஊடாக முன்னெடுக்கப்பட்ட உதவித்திட்டம் தொடர்பில் சுமார் பத்து வருடங்களின் பின்பு செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து தன்னை கைது செய்ய முயற்சி எடுக்கப்படுவதாக யாழ் உடுப்பிட்டி, 15ம் கட்டை, உமா பவனத்தைச் சேர்ந்த சர்வதேச ஊடகவியலாளராகக் கடமையாற்றி வரும் இரத்தினம் தயாபரன் (50) கடந்த மார்ச் 7ம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
இலங்கை காவல்துறைக்கு எதிராக இந்த முறைப்பாடு பதியப்பட்டுள்ளதுடன், குறிப்பாக யாழ் மாவட்ட பிரதி காவல்துறை அத்தியட்சகருக்கு எதிராக இந்த மனித உரிமை மீறல் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

முறைப்பாடு தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் 2021ம் ஆண்டு முற்பகுதியில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இரத்தினம் தயாபாரனிடமும், சக ஊடகவியலாளரான த. வினோஜித் உள்ளிட்டவர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 2022 ஜனவரி மாதம் அவரை கைது செய்ய திட்டமிடப்பட்ட நிலையில் மல்லாமகம் நீதிமன்றில் கைதுக்கு எதிராக முன்பிணை பெறப்பட்டுள்ளதுடன் கடவுச்சீட்டும் கையளிக்கப்பட்டுள்ளது. இவர் ஐந்து இலட்சம் ஆட் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

இந்த 11 வருடங்களுக்கு முன் நடைபெற்ற ஓர் சம்பவத்தை காரணமாக வைத்து 2022, ஜனவரி 16ம் திகதி மீண்டும் தன்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டமையினால் தனது மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், இந்த மனித உரிமை மீறலுக்கான காரணம் அரசியற் கொள்கை என்று இரத்தினம் தயாபாரன் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான ஆதாரங்களாக கண்கண்ட சாட்சிகளாக மூவரை பெயர் குறிப்பிட்டுள்ள அவர், ஆவண சாட்சியங்களாக நீதிமன்ற தடை, வாக்குமூலம், முறைப்பாடுகளையும் அவர் குறிப்பிடுகின்றார்.

 

2000மாம் ஆண்டிலிருந்து ஊடகவியலாளராக கடமையாற்றி வரும் தயாபரன் இது திட்டமிடப்பட்டதொரு சதி என்று குறிப்பிடுகின்றார். நிதிக்குற்றம் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பற்றிய விசாரணைகள் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்ற சட்டவிதிமுறைகள் உள்ள நிலையில் இந்த விவகாரத்தை மீண்டும் பொலிசார் கையிலெடுத்திருப்பதானது தன்னையும் ஒட்டுமொத்தமாக ஊடகத்துறையையும் அச்சுறுத்தும் செயல் என்று குறிப்பிட்டார்.
இச்சம்பவத்தின் பின்னணி பற்றி கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட தயாபரன் கூறியதாவது, 2011ம் ஆண்டு தனது மகளுக்கு கண்ணில் சத்திரசிகிச்சை செய்வதற்காக இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல விமான டிக்கட்டுக்கான செலவாக 37 ஆயிரம் ரூபா தேவை என்று உதவி கேட்டு வந்த வன்னியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மனிதாபிமான அடிப்படையில் ஊடகங்களில் அச்செய்தியை வெளியிட்டு உதவியதனூடாக 75 லட்சம் பண உதவி அவருக்கு கிட்டியது. எனினும் இந்த உதவித்தொகையைப் பெற்றுக்கொண்ட அந்நபர் அந்த உதவித்தொகையை தவறான வழியில் பயன்படுத்துகின்றார் என்று அவரது மனைவி செய்த முறைப்பாட்டை அடுத்து ஊடகப் பிரதிநிதிகள் சுமார் 15 லட்சம் ரூபாவை வறுமையில் உள்ள பிள்ளைகளுக்கு பகிர்ந்தளிக்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் அந்த தொகையை பகிர்ந்தளித்தார். இந்த நிகழ்வை ஊடகங்களும் செய்திகளாகப் பிரிசுரித்திருந்தன. இந்நிலையில் கடந்த 2016- 2017ம் ஆண்டு மீண்டும் தனது பிள்ளைக்கு உதவி தொகை மீண்டும் தேவை என்றும் அதனை ஊடகங்களில் வெளியிட்டு தருமாறும் அவர் கேட்ட பொழுது அவரின் மோசடியான செயற்பாடுகளை ஏற்கெனவே அறிந்து வைத்திருந்த ஊடகங்கள் அவற்றை பிரசுரிக்க மறுத்தன. இதனால் ஆத்திரமுற்ற அவர் பாதுகாப்பு தரப்பினரின் ஆதரவுடன் ஊடகங்களுக்கு எதிராகவும், ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் செயற்பட ஆரம்பித்தார்.

 

தன்னை இவ்வாறு முடக்குவதனூடாக யாழ் ஊடக நிலையத்தினையும், ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்த முடியும் என்று கருதப்படுவதாக குறிப்பிடும் தயாபரன், பாதுகாப்பு தரப்பும் யாழ் ஊடகவியலாளர்களை அச்சுறுத்த இவ்விடயத்தை ஆயுதமாகப் பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டார். இது முற்று முழுதாக மனித உரிமை மீறல் என்று குறிப்பிட்ட அவர், பாதுகாப்பு தரப்பின் ஆதரவின்றி இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழ் வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட தவறவில்லை.

This post is also available in: English සිංහල

More News

தமிழ் மொழிக் கல்விக்கு வழியின்றி இனம் மாறும் தமிழர்கள

த. மனோகரன் தினக்குரல் 2016/01/05 கட்டுரை...

Read More