அரச உத்தியோகத்தர்களினால் பகையாளிகளாகப் பார்க்கப்படும் தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தும் ஊடகவியலாளர்கள்!

அரச உத்தியோகத்தர்களினால் பகையாளிகளாகப் பார்க்கப்படும்
தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தும் ஊடகவியலாளர்கள்!

தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தும் ஊடகவியலாளர்கள் அரச அதிகாரிகளினால் பகையாளிகளாகக் கருதப்படுகின்றனர். தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தி கோப்பாய் பிரதேச செயலகத்திடம் தகவல்களைப் பெற முற்பட்ட போது பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும், இதன்போது அரச உத்தியோகத்தர்களினால் தனது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம், கோப்பாய், கோப்பாய் மத்தி என்ற முகவரியில் வசிக்கும் சிரேஷ்ட ஊடகவியலாளரான குமாரசுவாமி செல்வக்குமார் (48) கடந்த மார்ச் 7ம் திகதி, 2022 அன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

கோப்பாய் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் சுபாஷினி மதியழகன், கோப்பாய் சமுர்த்தி உத்தியோகத்தர் அன்ரனி ஆகியோருக்கு எதிராக அவர் இந்த முறைப்பாடுகளை செய்துள்ளார்.
தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தி தகவல் அறிய முற்பட்டபோது பிரச்சினை ஏற்பட்டதாக அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் அலுவலக உத்தியோகத்தரை அனுப்பி வைத்து மிரட்டியதாகவும், முகநூலில் தவறான விடயங்களை பதிவிடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ள செல்வக்குமார், அந்த குறிப்பிட்ட அலுவலக உதவியாளர் மனைவியையும் மிரட்டியுள்ளதாகவும், வீதியில் பயணிக்கும் போது தன்னை அவர் பல தடவைகள் மிரட்டியதாகவும் முறைப்பாட்டில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் கண்கண்ட சாட்சி ஒன்றையும், முகப்புத்தகப் பதிவுகளை ஆவண சாட்சியமாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தகவல் அறியும் சட்டத்தினைப் பயன்படுத்தி அரச உத்தியோகத்தர்களிடம் விபரம் கோரும் போது அவர்கள் ஊடகவியலாளர்களை எதிரிகளாகக் கருதி பல்வேறு அழுத்தங்களைப் பிரயோகிப்பதாக அவர் குறிப்பிட்டார். தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தும் ஊடகவியலாளர்கள் அரச அதிகாரிகளினால் பகையாளிகளாகப் பார்க்கப்பட்டு பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். மேலும் அரச அதிகாரிகளிடம் தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தும் போது அவர்களின் அலுவலக உதவியாளர்கள் அவற்றை அறிந்துகொண்டு பல்வேறு அடக்குமுறைகளையும் துன்புறுத்தல்களையும் மேற்கொள்கின்றனர் என்று செல்வக்குமார் தெரிவித்தார். இதன் அடிப்படையிலேயே கோப்பாய் பிரதேச செயலகத்தின் அலுவலக உதவியாளர் தமக்கு எதிராக பல்வேறு மிரட்டல்களையும், அச்சுறுத்தல்களையும் முன்னெடுத்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தி அரச அலுவலகங்களில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை சமூகத்திற்கு வெளிச்சம் இட்டு காட்டிய ஊடகவியலாளர்களுள் செல்வக்குமார் முக்கிய இடத்தினை வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தி கண்டறிந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் முகப்புத்தகத்தில் பதிவுகளையும் மேற்கொண்டு வந்திருந்தார். எனினும் அந்த முகப்புத்தகக் கணக்கு முடக்கப்பட்டு விட்டதாகவும், தன்னால் அந்த முகப்புத்தகப் பக்கத்தை முன்பு போல் இயக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டார்.

அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில்; தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தி விடயங்களை வெளிக்கொணர்வது அரச உத்தியோகத்தர்களுக்கும், நிறுவனங்களுக்கும் பெரும் தலையிடியாக உள்ளதனால், அதில் ஈடுபாடு காட்டும் ஊடகவியலாளர்கள் பல்வேறு வழிகளில் குறி வைக்கப்படுகின்றனர். தகவல் அறியும் சட்டத்தைப பயன்படுத்தி எழுதப்படும் ஒவ்வொரு செய்தியின் முடிவிலும் தான் இவ்வாறான பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வது வழமையான விடயம் என்று செல்வக்குமார் தெரிவித்தார். அந்த வரிசையில் கோப்பாய் சம்பவம் மிக அண்மையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் என்று அவர் மேலும் கூறினார்.

This post is also available in: English සිංහල