தொடரும் அச்சுறுத்தல்களாலும், மிரட்டல்களாலும் ஊடகப்பணிகளை
சுயாதீனமாக முன்னெடுக்க முடியவில்லை.
பக்கச்சார்பற்ற செய்திகளை வெளியிடுவதால் தொடர்;ச்சியாக அச்சுறுத்தலுக்குள்ளாவதாக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் வ. சக்திவேல் (40) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார்.
வெவ்வேறு முறைப்பாடுகளாக நான்கு முறைப்பாடுகளை சமர்ப்பித்துள்ள அவர், ஊடகவியலாளர்கள் சுயாதீனமாக செயற்பட வழியேற்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு, களுதாவளை, வன்னியர் வீதி என்ற முகவரியைச் சேர்ந்த இந்த ஊடகவியலாளர் தனது முதல் முறைப்பாட்டில் குற்றப்புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவரினால் அச்சுறுத்தப்பட்டமையைக் குறிப்பிட்டுள்ளார்.
“குற்றப்புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவர் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர் தொடர்பில் நான் செய்தி வெளியிட்டதாகவும், அவர் தொடர்பில் நான் ஏனையவர்களிடம் விசாரிப்பதாகவும் என்னை அச்சுறுத்தும் வகையில் கதைத்தார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது முறைப்பாட்டை அவர், முன்னாள் அரசாங்க அதிபர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ{க்கு எதிராக முன்வைத்துள்ளார். குறித்த அரசாங்க அதிபருக்கு எதிராக இணையத்தளங்களில் தவறான செய்தி வெளிவந்த காரணத்தால் அச்செய்தி என்னால் வெளியிடப்பட்டது என அரசாங்க அதிபர் மட்டக்களப்பு தலைமைப் பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார். இதனால் பொலிசார் என்னை விசாரணை செய்தனர் என்று அந்த முறைப்பாட்டில் குறிப்பிட்டிருக்கின்றார். இந்த சம்பவம் 2016ம் ஆண்டு இடம்பெற்றுள்ளது.
தனது மூன்றாவது முறைப்பாட்டில், “எனக்கு எதிராக எனது புகைப்படத்தை அச்சிட்டு மட்டு ஊடக மையத்தில் துண்டுபிரசுரம் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனித உரிமை மீறல் 2020.11.20 அன்று நடைபெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தனது நான்காவது முறைப்பாடு தொடர்பாக இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:
“கடந்த 2020.01.23 அன்று மட்டக்களப்பு மத்திய பேரூந்து நிலையத்தின் மேலுள்ள மட்டு ஊடக மையத்தின் காரியாலயத்தில் நான் உட்பட 7 ஊடகவியலாளர்களின் புகைப்படங்களை பிரசுரித்து துண்டுபிரசுரம் மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது”.
இந்த மிரட்டலை யார் செய்தார்கள்? ஏன் செய்தார்கள்? என்பதை அறிந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அவர் இந்த முறைப்பாட்டினூடாக கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது ஊடகப் பணியை மேற்கொள்ள முடியாது தொடர்ச்சியாக இவ்வாறான அச்சுறுத்தல்களை தாம் எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் போது இவ்வாறான பிரச்சினைகளை தொடர்;ச்சியாக எதிர்கொண்டு வருதனைக் கருத்திற்கொண்டு ஊடகவியலாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பினை அளிக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவும் ஊடக அமைப்புகளும், பாதுகாப்பு தரப்பினரும் முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
– மட்டக்களப்பு ஊடகவியலாளர் வ.சக்திவேல் விசனம்
This post is also available in: English සිංහල