ஊடக அடையாள அட்டையே ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகிவிடுகின்றது!

ஊடக அடையாள அட்டையே ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகிவிடுகின்றது!

மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை ஊடகங்களில் அறிக்கையிடும் போது தொடர்ச்சியாக பாதுகாப்பு தரப்பினரின் அச்சுறுத்தலுக்குள்ளாவதாக முல்லைத்தீவை சேர்ந்த ஊடகவியலாளர் ஜெகதீஸ்வரன் டிஷாந்த் (29) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
மல்லாவி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், இராணுவ காவலரண் உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு எதிராக அவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

முல்லைத்தீவு, நட்டாங்கண்டல், பூவரசங்குளம், கொம்பவத்தகுளம் முகவரியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் டிஷாந்த் புலனாய்வுப் பிரிவினர் தன்னை கண்காணித்து வருவதாகவும் இது தனது ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் விடயமாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்றை முன்வைத்து இந்த முறைப்பாட்டை அவர் செய்துள்ள போதிலும் 2015ம் ஆண்டு முதல் தான் இவ்வாறு அச்சுறுத்தலுக்குள்ளாகி வருவதாகக் கூறினார்.
பிரதேச மக்களின் முறைப்பாட்டை அடுத்து நட்டாங்கண்டல் பாலம் தொடர்பான செய்தியை அறிக்கையிடுவதற்காக புகைப்படம் எடுக்க சென்ற போது அப்பகுதியில் உள்ள இராணுவ காவலரணில் உள்ள இராணுவத்தினரால் தனது பணிக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது போன்ற பல சம்பவங்களை தான் எதிர்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அளித்துள்ள முறைப்பாட்டில் பின்வருமாறு அவர் தனது முறைப்பாட்டை விபரித்துள்ளார்:
‘மல்லாவி மற்றும் பாண்டியன் குளம் பகுதிகளில் செய்தி அறிக்கை செய்வதற்காக என்னுடன் இன்னொரு சக ஊடகவியலாளர் பயணம் செய்த பொழுது இராணுவ காவலரணில் இருக்கும் இராணுவ உத்தியோகத்தர்கள் நாங்கள் மீண்டும் திரும்பி வரும் போது எங்களை இடைமறித்து எமது உடமைகளை பரிசோதனை செய்திருந்தனர். நாங்கள் ஊடகவியலாளர்கள் என்று கூறி அடையாள அட்டையை காண்பித்த போதும், அவ்விடத்தை விட்டு எம்மை நகர விடாமல் இடையூறு செய்தனர். பல மணி நேரங்களின் பின்பு தான் பிரதேசத்திற்கு பொறுப்பாக உள்ள இராணுவ அதிகாரி வந்து எங்களை செல்ல அனுமதித்தார். இது எங்கள் ஊடகப்பணியை தடுத்து இடையூறு விளைவிக்கும் செயற்பாடாகும்.’
தொடர்ச்சியாக பாதுகாப்பு தரப்பினரால் இவ்வாறான இடையூறுகள் விளைவிக்கப்படுவதனால் தம்மால் சுதந்திரமாக செயற்படாத நிலைமை உள்ளதாகவும், அச்சுறுத்தலை எந்த நேரத்தில் எதிர்கொள்ள நேரிடுமோ என்ற மனநிலையில் தான் பணியாற்றி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மக்கள் ஊடகவியலாளர்களிடம் பிரச்சினைகளைக் கூறி அதற்கு தீர்வுப் பெற்றுத்தர உதவுமாறு கேட்கின்றனர். ஆனால் மக்கள் நலன்சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் செய்திகளை அறிக்கையிடும் போது அவை பாதுகாப்பு தரப்பினருடன் முரண்பட காரணமாக அமைந்து விடுகின்றது. ஏனெனில் பாதுகாப்பு தரப்பினரின் அடக்குமுறைக்குட்பட்டு பேச்சு சுதந்திரம் இன்றி இருக்கும் பொதுமக்கள் வெளிப்படுத்தும் விடயங்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு பிரச்சினையாகி விடும் என்ற அச்ச உணர்வு அவர்களிடம் காணப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் நடத்தும் போராட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை அறிக்கையிடும் போதும் புகைப்படங்கள் எடுக்கும் போதும் ஊடகவியலாளர்களுக்கு திட்டமிட்டு இடையூறு விளைவிக்கப்படுகின்றது என்று டிசாந்த் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

மேலும் இவ்வாறு மக்கள் நலன் சார்;ந்து செயற்படும் ஊடகவியலாளர்கள் விசேடமாகக் கண்காணிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்த அவர். சமீபத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் என்று கூறிக்கொண்ட இருவர் தன்னை பெயரை சொல்லி அழைத்து தகவல்களைப் பெற முயற்சித்ததாகவும், அவர்களின் அடையாள அட்டைகளைக் கேட்டபொழுது அருகாமையில் இருக்கும் இராணுவ முகாமுக்கு வருமாறும் அங்கு முழுமையான விபரங்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் அச்சுறுத்தலான ஓர் சூழ்நிலையில் தங்கள் ஊடகப் பணியை ஆற்றி வருவதாகக் குறிப்பிடும் டிஷாந்த், போரில் தனது இரு சகோதரங்களை இழந்துவிட்ட நிலையில் தனது பாதுகாப்பு குறித்தும் தன் குடும்ப உறவுகள் அச்சமுற்றிருப்பதாகவும், இந்த அச்சுறுத்தல்கள் பற்றி பல அமைப்புகளுக்கு அறிவித்துள்ள போதிலும் இதுவரை எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை என்றார்.

சில சந்தர்ப்பங்களில் ஊடகவியலாளர்களுக்காக வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையே பிரச்சினைக்குரியதாக இருக்கின்றது. அதனை காட்டி நாங்கள் எங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் போது பாதுகாப்பு தரப்பினர் மிக மோசமாக நடந்துகொள்கின்றனர் என்று டிசாந்த் குறிப்பிட்டார்.

– ஊடகவியலாளர் டிஷாந்த்

 

This post is also available in: English සිංහල