கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்திற்கான பிரதான பாதையும் மீறப்படும் அம்மக்களின் மனித உரிமைகளும்!

கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்திற்கான பிரதான பாதையும் மீறப்படும் அம்மக்களின் மனித உரிமைகளும்!

மன்னார் முள்ளிக்குளம் கிராமத்திற்கு செல்லும் பாதை கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதனால் அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சுதந்திரமாக போக்குவரத்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பட் முறையிட்டுள்ளார்.
இதனால் அக்கிராமத்தைச் சேர்ந்த மக்களின் உரிமைகள் மீறப்படுவதாக மன்னார், மூர் வீதி என்ற முகவரியி;ல் வசிக்கும் ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பட் (34) மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு ஒன்றை கடந்த மார்ச் 6ம் திகதி 2022 அன்று பதிவு செய்துள்ளார்.

இலங்கை கடற்படைக்கு எதிராக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக முசிலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் கிராமத்தை கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர். நாட்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர்.

எனினும் மக்கள் தங்கள் கிராமத்திற்கு செல்லும் பிரதான பாதை இன்றுவரை கடற்படையினரின் கட்டுபாட்டில் உள்ளதால் மக்கள் காட்டுப் பாதையையே பயன்படுத்தி வருகின்றனர். காட்டுப்பாதை என்பதால் மக்கள் பல்வேறு அச்சங்களுக்கு மத்தியில் பாதையைக் கடந்து நாளாந்தம் பயணிக்கின்றனர் என்று அந்த முறைப்பாடு அமைந்துள்ளது.
முள்ளிக்குளம் கிராமத்தில் மீள்குடியேற்றம் நடைபெற்ற நாளிலிருந்து இந்த மனித உரிமை மீறல் இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் பாதுகாப்பான பாதையினூடாக தமது கிராமத்திற்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதே இவரின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

போருக்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களில் மீள்குடியேற்றங்கள் இடம்பெற்றாலும் முற்றுமுழுதாக பாதுகாப்பு தரப்பினரால் அந்த பகுதிகள் விடுவிக்கப்படவில்லை. இந்த கிராமத்தில் பிரதான பதையை கடற்படையினர் ஆக்கிரமித்துள்ளதனைப் போன்றே பல இடங்களில் பாதுகாப்பு தரப்பினரின் பிரசன்னமும், ஆக்கிரமிப்பும் உள்ளது.

இந்த கிராமத்தில் மக்கள் காட்டுப்பாதையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் அனர்த்தங்கள் பற்றி அனைவரும் அறிந்திருப்பர். சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் என்று பலதரப்பட்டவர்கள் இந்த காட்டுப்பாதையை பயன்படுத்துவதனால் பல்வேறு பிரச்சினைகளை முகம் கொடுக்க நேரிடும். இருளில் பாதையை பயன்படுத்தும் போது ஆபத்துக்கள் மேலும் அதிகரிக்கக் கூடும். பாதுகாப்புக்காக பிரசன்னமாகியிருக்கும் படைத்தரப்பினர் இங்கு மக்களின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக இருப்பது மிகவும் பிரச்சினைக்குரியது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் தான் ஊடகவியலாளர் லெம்பட் இவ்விடயத்தை அக்கிராமத்தின் மக்கள் சார்பாக பொதுவெளிக்கு கொண்டுவந்துள்ளார். இந்த முறைப்பாட்டினூடாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இவ்விடயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்ற எதிர்பார்ப்போடு அவர் இந்த முறைப்பாட்டினை முன்வைத்துள்ளார்.

– ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பட்

This post is also available in: English සිංහල