மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள்!
மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள தொடர்பில் கவனம் செலுத்துமாறும், அவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்க ஆவண செய்யுமாறும் ஊடகவியலாளர் கே.பிரியா இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாட்டினூடாக வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
மன்னார், பெரிய மடுவைச் சேர்ந்த ஊடகவியலாளரான கே.பிரியா (42) இலங்கை இராணுவத்தினருக்கு எதிராகவும், சமூக சேவைகள் அமைச்சுக்கு எதிராகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மார்ச் 6, 2022 அன்று முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
மக்களுடைய வாழ்வாதாரத்தை ஈட்டக் கூடிய வளமான குளப்பகுதியும், மேட்டு நிலக்காணியும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகளும் ஏனையோர் போன்று தத்தமது தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய அணுகு வசதிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் இந்த முறைப்பாட்டில் அவர் விசேடமாக வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.
நீண்ட காலமாக இவர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், மனித உரிமைகள் மீறல் நடைபெற்ற இடமாக சன்னார், ஈச்சளவக்கை மன்னார் மாவட்டம் போன்ற பகுதிகளைக் குறிப்பிட்டுள்ளார். மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளுக்குரிய ஆவணங்கள் மக்களிடமும் உள்ளதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.
இவ்விடயம் தொடர்பான முறைப்பாட்டின் பின்னர் சிறிய குளப்பகுதி மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் ஆனால் அவை முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்றும் அவர் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியிருக்கின்றார். மாற்றுத் திறனாளிகளின் பொருளாதாரத் தேவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும். ஏனையோர் போன்று இவர்களும் இயங்க வழியமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
போருக்கு பின்னராக வாழ்வியலில் மாற்றுத்திறனாளிகளின் நிலைமை வடக்கு கிழக்கில் மிகவும் கவலைக்குரியதாகவே உள்ளது. போர் தந்த வலிகளில் மாற்றுத்திறனாளிகளும் முக்கியமானதொரு பிரிவினராக உள்ள நிலையில் அவர்கள் தொடர்பான சிந்தனைகள் இன்றி அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
சமூகத்தின் நலன்களைக் கவனிக்க வேண்டிய பொறுப்பினை உடைய சமூக சேவைகள் அமைச்சும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நிலைப்படுத்தப்பட்டிருக்கும் இராணுவத் தரப்பும் இவ்விடயத்தில் பாராமுகமாக செயற்படுவதனை அனுமதிக்க முடியாது.
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதும், காணிகளை குளங்களை விடுவிப்பதும் இவர்கள் இருதரப்பினருக்கும் உரிய பொறுப்பு என்று இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
– ஊடகவியலாளர் கே.பிரியா
This post is also available in: English සිංහල