இடைநடுவில் நிறுத்தப்பட்ட கற்கைநெறியை பூர்த்தி செய்ய சந்தர்ப்பம் தாருங்கள்!

இடைநடுவில் நிறுத்தப்பட்ட கற்கைநெறியை பூர்த்தி செய்ய சந்தர்ப்பம் தாருங்கள்!

சமுத்திரவியல் பல்கலைக்கழக வளாக ஏற்பாட்டியல் முகாமைத்துவம் சம்பந்தமான டிப்ளோமா கற்கைநெறியை தொடர்ந்த போது நிகழ்ந்த ஓர் சம்பவத்தினால் கற்கைநெறியை பாதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு தனது மனித உரிமைகள் மீறப்பட்டதாக சோ. கங்காசுதர் (32) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

மட்டக்களப்பு தாமரைக்கேணி என்ற முகவரியைச் சேர்ந்த அவர், சமுத்திரவியல் பல்கலைக்கழகம் மட்டக்களப்பு வளாகம் – இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு எதிராகவும், மட்டக்களப்பு சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தின் கற்கை நெறி இணைப்பாளர் அருள் அவர்களுக்கும் எதிராக இந்த முறைப்பாட்டை பதிவு செய்திருக்கின்றார்.

அவர் இந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாவது,
“2016ம் ஆண்டு சமுத்திரவியல் பல்கலைக்கழக மட்டக்களப்ப வளாகத்தில் ஏற்பாட்டியல் முகாமைத்துவம் சம்பந்தமான டிப்ளோமா கற்கை நெறியை வார இறுதி நாட்களில் பயின்று கொண்டிருந்தேன். எமது கற்கை நெறிக்கு வளவாளராக வந்த நபர் கணித மற்றும் ஆங்கில பாடங்களுடன் தொடர்புப்படுத்தி பயிற்சியை முன்னெடுத்துக் கொண்டிருந்தார்.

பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்களில் பெரும்பாலான மாணவர்களுக்கு கணித பாடத்தில் சில பகுதிகளை ஆங்கிலத்தில் கூறும் போது அதற்கு தமிழில் விளக்கம் கூறாமல் கற்பித்ததினால் மேற்படி ஆசிரியர் தொடர்பில் மதிப்பீட்டு ஆய்வு குழுவுக்கு முறைப்பாடு செய்தேன். நான் முறைப்பாடு செய்து சில நிமிடங்களில் கொழும்பில் இருந்து வந்திருந்த சமுத்திரவியல் பல்கலைக்கழக பணிப்பாளர் என்னை மிரட்டி அச்சுறுத்தி நான் தெரிவித்த விடயங்களை வாபஸ் பெறுமாறும் அவ்வாறு செய்ய தவறினால் எனது டிப்ளோமாவை தொடர முடியாது விலக்கி வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அச்சுறுத்தினார்” என்று முறைப்பாட்டில் பதிவாகியுள்ளது.

மனித உரிமை மீறல் இடம்பெற்ற இடமாக சமுத்திரவியல் பல்கலைக்கழக வளாகத்iதைக் குறிப்பிட்டுள்ள அவர், நிர்வாகக் குறைபாடே இதற்கு காரணம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். கண்கண்ட சாட்சிகளாக சக மாணவர்கள், விசாரணைக்குழுவினர் ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளார்.

உயர் நிர்வாகியால் மேற்படி அச்சுறுத்தல் மேற்கொள்ளப்பட்டதனால் தனது டிப்ளோமா கற்கை நெறியை பாதியில் நிறுத்த வேண்டிய துரதிருஷ்ட நிலை ஏற்பட்டதாகவும், வகுப்பில் பாரபட்சமாக நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் உயர்நிர்வாகியே இவ்வாறு அநீதி இழைத்ததால் தன்னால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
தனக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு தீர்;வாக மேற்படி இடைநடுவில் கைவிடப்பட்ட கற்கை நெறியை தொடர்;ந்து பூரணமாக நிறைவு செய்து டிப்ளோமாவை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் அமைத்துத் தருமாறு அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் இந்த முறைப்பாட்டினூடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

– மட்டக்களப்பைச் சேர்ந்த கங்காசுதர்.

 

This post is also available in: English සිංහල