சிவில் சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி முடக்க பாதுகாப்பு தரப்பு முயற்சி!

சிவில் சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி முடக்க பாதுகாப்பு தரப்பு முயற்சி!

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புப்படுத்தி கைது செய்து துன்புறுத்துகின்றனர் என்று மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிய தலைவர் ச.சிவயோகநாதன் (52) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
மட்டக்களப்பு, திராய்மடு, 4ம் குறுக்கு, இல 141ஃ03 என்ற முகவரியைச் சேர்ந்த இவர் மட்டக்களப்பு பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரி, பொலிஸ் திணைக்கள மட்டக்களப்பு பொறுப்பதிகாரி ஆகியோருக்கு எதிராக இந்த முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.

இந்த மனித உரிமை மீறல் தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
“கடந்த ஓராண்டு காலமாக பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மூன்று தடவைகளும், குற்றப்புலனாய்வு பிரிவினரால் இரண்டு தடவைகளும், பொலிசாரினால் (மட்டக்களப்பு மற்றும் திருக்கோயில்) இரு தடவைகளும் கடுமையான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளேன். இந்த நாட்டு சட்டத்திற்கு புறம்பாக நான் எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை. ஆனாலும் தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புப்படுத்தி என் மீது விசாரணை நடைபெற்று வருகின்றது. எனது வீடு மற்றும் அவர்களது அலுவலகங்களில் மனித உரிமை மீறல் நடைபெற்றது. இது ஒரு அடிப்படை உரிமை மீறலாகும்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொத்துவில் நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணைகள் நடைபெறுகின்றன என்றும், அரசியற் கொள்கை மற்றும் இனம் என்ற காரணத்தினால் இந்த துன்புறுத்தல்களும், மனித உரிமை மீறல்களும் இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மனித உரிமை மீறலுக்கு கண்கண்ட சாட்சியங்களும், ஆவண சாட்சியங்களும் உண்டு என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் எனக்கு நியாயமான நீதி வேண்டும். பொய்யான இந்த குற்றச்சாட்டுக்களிலிருந்து எனக்கு விடுதலை வேண்டும் என்று அவர் முறைப்பாட்டில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களின் நலன்களுக்காக இயங்கி வரும் ஒரு சிவில் சமூக செயற்பாட்டாளர் என்ற வகையில் தான் எதிர்கொள்ளும் இவ்வாறான துன்புறுத்தல் அடக்குமுறைகளினூடாக எனது செயற்பாடுகளை முடக்கிவிட பாதுகாப்பு தரப்பு முயற்சிப்பதாகவும் அவர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதுகாப்பு துறையின் இவ்வாறான அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயற்பாடுகள் காரணமாக தான் தொடர்ச்சியாக மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும், தனது செயற்பாடுகளை இவ்வாறான செயற்பாடுகள் ஸ்தம்பிக்க செய்வதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

– சிவில் சமூக செயற்பாட்டாளர் சிவயோகநாதன் தெரிவிப்பு

This post is also available in: English සිංහල