கல்லராவ முகத்துவாரத்தை மூடுதல் அல்லது பெண் கடலை மலடாக்குதல்.

கல்லராவ திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள மீன் வளங்கள் நிறைந்த மீனவக் கிராமமாகும். கல்லராவவின் ஊடாகவே யாங் ஆறு கடலுடன் சேருகின்றது. யாங் ஆற்றின் காரணத்தால் கல்லராவ கடலில் வளமான மீன் விளைச்சல் கிடைக்கின்றதென்பது மீனவர்களின் நம்பிக்கையாகும். கல்லராவ கடல் மீனவர்களிடையே பெண் கடல் எனும் பெயரால் பிரசித்தி பெற்றது. ஆழ்கடல் மீன்கள் தமது இனப்பெருக்கத்துக்காக கல்லராவ முகத்துவாரத்துக்கு வருவதே அதற்கான காரணமாகும்.

கல்லராவ சிறு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் ஆழ்கடல் கொந்தளிக்கும் காலங்களில் யாங் ஆறு கடலுடன் கலக்கும் கல்லராவ களப்புவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு தமது வாழ்க்கையை கொண்டு நடத்துகின்றனர். இதன் காரணமாக கல்லராவ மீனவர்கள் யாரிடமும் கையெந்தாத மீனவர்கள் எனப் பெயர் பெற்றனர்.

எனினும் 2011 ஆம் ஆண்டு இந்தக் களப்பின் முகத்துவாரத்துக்கு அருகில் காணியை விலைக்கு வாங்கிய குறித்த ஒரு நிறுவனம் இந்த இயற்கையாக அமைந்த முகத்துவாரத்தை மணல் மூட்டைகளை இட்டு அடைத்து யாங் ஆறு பயணிக்கும் வழியை மாற்றி அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர். அதற்காக கல்லராவ கிராமவாசிகளை நாளாந்த கூலி வேலையில் அமர்த்தியதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். சென்டினல் ரியலட் எனும் இந்தக் கம்பனி திரு மிலிந்த மொரகொடவுக்குச் சொந்தமான ஹோட்டல் கம்பனியாவதாக கல்லராவ கிராமவாசிகள் கூறுகின்றனர்.

தற்போது கல்லராவ முகத்துவாரப் பகுதி முதலில் இருந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட 800 மீற்றர் தூரத்தில் கடலுடன் இணைகிறது. அத்துடன் முன்னையவாறு முகத்துவாரம் கடலுக்கு நேராக அமையாததால் முறையானவாறு ஆற்றின் நீரோட்டம் ஓடிச் செல்வதில்லை. இக் காரணத்தால் கடலிலிருந்து முட்டை இடுவதற்கு களப்பை நோக்கி வரும் மீன்களுக்கு தடை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையால் களப்பில் மீன்கள் பெருகும் வாய்ப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடல் கொந்தளிப்புக் காலங்களில் களப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தமது தொழில் வாய்ப்பை இழந்துள்ளதுடன், தற்போது கிராமத்தில் வாழ்ந்து வந்த பல சிறு மீன்பிடித் தொழிலாளர்கள் மீன் வலை முதலாளிகளின் தொழிலாளர்களாக ஆகியுள்ளனர். தமக்குச் சொந்தமாக இருந்த கல்லராவ களப்புவின் முகத்துவாரத்தை மீண்டும் முன்னரைப் போலவே அமைத்துத் தருமாறு அதிகாரிகளுக்கு பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், கடலோரப் பாதுகாப்புத் திணைக்களமும், மத்திய சுற்றாடல் அதிகார சபையும் அதில் தலையீடுவதில் நாட்டம் காட்டாததாக கல்லராவ புனித அந்தோனி சிறு மீன்பிடித் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் திருமதி சீ. மானெல் பொடிநேரிஸ் கூறினார்.

இது தொடர்பாக உரிய சங்கத்தினால் மீண்டும் மீண்டும் செய்யப்பட்ட கோரிக்கைகளின் காரணமாக இதற்கு முன் கல்லராவ களப்பின் முகத்துவாரப் பகுதி அந்த இடத்தில் கடலுடன் இணைந்தமைக்கான சத்தியப் பிரமாணத்தை முன்வைக்குமாறும், இதற்கு முன்னர் இந்த இடத்தில் யாங் ஆற்றின் முகத்துவாரப் பகுதி பாய்ந்து சென்றதற்கான ஆதாரங்கள் இருப்பின் அதனை முன்வைக்குமாறும் கல்லராவ மீனவர்களுக்கு கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் திணைக்களத்தின் திருகோணமலை அலுவலகம் தெரிவித்திருந்தது.

அதற்கமைய கடந்த மார்ச்சு 14 ஆம் திகதி கல்லராவ புனித அந்தோனி சிறு மீன்பிடித் தொழில் மீனவச் சங்கம் உரிய நிறுவனங்களுக்கு சத்தியப் பிரமாணங்களையும், ஆவணங்களையும் ஒப்படைத்துள்ளது. கல்லராவ சிறு மீன்பிடித் தொழில் மீனவர்கள் இதற்கு 10 வருடங்களுக்கு முன் தமது கிராமத்துக்கு அருகில் கடலுடன் கலந்த யாங் ஆற்றை முன்னரைப் போலவே கல்லராவ களப்பின் முகத்துவாரப் பகுதி இயற்கையாகப் பாய்ந்து சென்றவாறு அமைத்துத் தருமாறு அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

This post is also available in: English සිංහල