காற்றாலை மின்சாரம் கோபுரங்கள் அமைப்பதால் மீனவர் வாழ்வாதாரம் பாதிப்பு!

காற்றாலை மின்சாரம் கோபுரங்கள் அமைப்பதால் மீனவர் வாழ்வாதாரம் பாதிப்பு!

காற்றாலை மின்சாரம் அமைக்கப்பட்டமையினால் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர் நீ.யூ.பொலிஸ்ரஸ் பச்சேக் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

மார்ச் 06ம் திகதி, 2022 அன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இது தொடர்பான முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ள மன்னார், பேசாலை, 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர் பொலிஸ்ரஸ் பச்சேக், மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் மின்சக்தி மற்றும் இயற்கை வலு சக்தி அமைச்சுக்கு எதிராக இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். பொதுமக்கள் சார்பாக இவர் இந்த முறைப்பாட்டை செய்திருக்கின்றார்.

மன்னார் பிரதேச செயலகப் பிரிவு தோட்டவெளி தொடக்கம் நடுக்குடா தென்கடற்கரைப் பகுதியில் 32 காற்றாலை மின்சாரம் கோபுரங்கள் அமைக்கப்பட்டதனால், குறித்த கடற்கரைப்பகுதியில் பருவகால மீன்டிபி தொழிலை மேற்கொள்ளும் பிரதேச மீனவர்கள் தொழிலை இழந்துள்ளனர். மீன் பாடும் வெகுவாகக் குறைந்துள்ளதனால் இவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என்று அவர் முறைப்பாட்டில் குறிப்பிட்டிருக்கின்றார். மேலும் குறித்த காற்றாலை மின்சாரம் அமைக்கும் போது இந்த செயற்பாட்டை நிறுத்துமாறும், இதனால் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கோரிக்கை விடுத்தும் வலுகட்டாயமாக இவற்றை அமைத்தனர் என்று அவர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மேலும் பல காற்றாலை கோபுரங்களை அமைக்க உள்ளதால் மக்கள் விசனமடைந்து வேண்டாம் என தெரிவிக்கின்றனர் என்று பச்சேக் இந்த முறைப்பாட்டில் தெளிவுப்படுத்தியிருக்கின்றார்.

2015ம் ஆண்டு திட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதி முதல் 2021ம் திறப்பு விழா நடைபெற்ற காலப்பகுதி வரையான காலப்பகுதியை மனித உரிமை மீறல் நடைபெற்ற காலப்பகுதியாக அவர் குறிப்பிட்டுள்ளார். கண்கண்ட சாட்சிகளாக பிரதேச மக்களையும், அரச அதிகாரிகளையும் இம்முறைப்பாட்டில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இப்பகுதி மக்களின் கோரிக்கையான இந்த செயற்றிட்டத்தை நிறுத்தும் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் அறிவித்த போதிலும் இந்த கோரிக்கை முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்தும் காற்றாலை மின்சாரத்தை அமைக்காமல் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துமாறு பச்சேக் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்தவொரு அபிவிருத்தித் திட்டமும் அந்த மக்களின் மனித உரிமைகள் மீறும் செயலாகும். அத்துடன் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் போது அம்மக்களின் வாழ்வாதாரம் தொடர்பில் சிந்தித்து செயற்படாமல் இருப்பதும் ஒருவகையில் அந்த மக்களுக்கு செய்யும் மோசமான அநீதியாகும். இதனை உணர்ந்து இம்மக்களுக்காக குரல் கொடுத்துள்ள இந்த ஊடகவியலாளர், இந்த மின்சார திட்டத்தினால் பாதிப்படையும் மக்களுக்கு உரிய நீதியைப் பெற்றுக்கொடுக்கும் எதிர்பார்ப்பில் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.

– பொலிஸ்ரஸ் பச்சேக்

 

This post is also available in: English සිංහල