காணொளி மூலம் இடையூறு விளைவிக்கும் காங்கேசன்துறை பொலிசார்!

காணொளி மூலம் இடையூறு விளைவிக்கும் காங்கேசன்துறை பொலிசார்!

மாதகல் பகுதியில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் கைது சட்டவிரோதமானது என மீனவர்கள் போராட்டம் நடத்திய பொழுது அங்கு செய்தி சேகரிக்க சென்ற வேளை ஊடகவியலாளரான இராசரத்தினம் தர்ஷன் (25) தனது கடமைக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் மனித உரிமை மீறல் இடம்பெற்றதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கடந்த மார்ச் 7ம் திகதி முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். காங்கேசன்துறை பொலிஸ் அதிகாரியொருவர் தன்னை காணொளி எடுத்து அச்சுறுத்தியதாக அவர் முறையிட்டிருக்கின்றார்.
சுழிபுரம், சுழிபுரம் மேற்கு என்ற முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட இவர் இந்த அச்சுறுத்தல் தொடர்பில் கண்டகண்ட சாட்சிகளாக இருவரையும், ஆவண சாட்சியாக படம் ஒன்றையும் முறைப்பாட்டில் பதிவு செய்திருக்கின்றார்.

இவ்விடயம் தொடர்பில் பத்திரிகை ஆசிரியரிடம் அறிவிக்கப்பட்டதுள்ளதாகவும், இணையத்தளங்களில் இச்சம்பவம் தொடர்பாக செய்திகள் வெளியிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார். இந்த சம்பவத்திற்கான காரணமாக நிர்வாகக் காரணத்தைக் கருதுவதாகவும் அவர் கூறியிருக்கின்றார். அத்துடன் இனிவரும் காலங்களில் காணொளி எடுத்து ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதுகாப்பு காரணங்களை முதன்மைப்படுத்தி ஊடகவியலாளர்களை புகைப்படம் எடுப்பதும், காணொளி செய்வதும் பொதுவான விடயமாக உள்ளது. இது யாழ் குடாநாட்டில் ஊடகவியலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் செயற்பாடாக உள்ளதுடன், இந்த செயற்பாடுகள் எதிர்காலங்களில் தங்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் ஓர் ஆயுதமாக மாறக் கூடும் என்று ஊடகவியலாளர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் முக்கியமான ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகள், மக்கள் பேரணிகளின் போது படைத்தரப்பும். பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வுகளில் பங்குபற்றும் ஊடகவியலாளர்களைக் கண்காணிக்கும் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது போர்க்காலத்திலும், போருக்கு பின்னரான காலப்பகுதியிலும் நடைபெற்றுக கொண்டிருக்கும் விடயமாக உள்ளது. இது தங்கள் சுதந்திரத்தையும், உரிமையையும் பாதிக்கும் செயல் என்றும், முற்றிலும் மனித உரிமைகள் மீறப்படும் செயல் என்றும் ஊடகவியலாளர்கள் தரப்பு கருதுகின்றது. ஏனெனில் இவ்வாறு புகைப்படம் எடுத்தல் மற்றும் காணொளி எடுத்தல் என்பனவை தொடர்பில் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்களிடம் முன் அனுமதி கோரப்படுவதில்லை. ஒருவரின் அனுமதியும் விருப்பமும் இன்றி புகைப்படம் எடுக்கவோ காணொளி பதிவுகளை மேற்கொள்ளவோ யாருக்கும் உரிமை இல்லாத நிலையில் பாதுகாப்பு தரப்பினர் இவ்வாறான செயற்பாடுகளில் அத்துமீறி செயற்படுவது ஊடகவியலாளர்களை அச்சுறுத்தவும், அவர்களின் சுதந்திரமான செயற்பாடுகளையும் முடக்கவும் அன்றி வேறெதுவும் இல்லை என்றே கருத வேண்டியுள்ளது.

இந்த காணொளிகள் ஏன் எடுக்கப்படுகின்றன? புகைப்படங்கள் எடுப்பதற்கான காரணம் என்ன? என்று விளக்கமளிக்கும் கடப்பாடும் பாதுகாப்பு தரப்பினருக்கு இல்லை. பொதுவாக பாதுகாப்பு காரணம் என்று கூறிக் கொண்டு ஊடகவியலாளர்களின் சுதந்திரத்திலும் அவர்களின் தனிமனித உரிமைகளிலும் தலையிடுவது கண்டிக்கப்பட வேண்டும். அதேவேளை இவ்வாறான செயற்பாடுகளைத் தடுப்பதற்கும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும் என்பதே ஊடகவியலாளர்களின் கோரிக்கையாகவும் உள்ளது.

தமிழ் ஊடகவியலாளர்கள் பயங்கரவாதிகள் என்ற மனோபாவத்துடன் செயற்படும் பாதுகாப்பு தரப்பினரின் இவ்வாறான செயற்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த யாழ் ஊடகவியலாளர்களின் கருத்தாகவும் உள்ளது.

ஊடகவியலாளர் இராசரத்தினம் தர்ஷன்.

This post is also available in: English සිංහල

More News

இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சிகள்

இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட அரசிய...

Read More