செய்தி அறிக்கையிடல் காரணமாக அரசியற் பழிவாங்கலுக்குள்ளானேன்!
– ஊடகவியலாளர் சப்தசங்கரி
காடழிப்பு சம்பந்தமான செய்தியை அறிக்கையிட்டதனால் அநீதியை எதிர்கொண்டதாக முல்லைத்தீவு ஊடகவியலாளர் ஞா. சப்தசங்கரி (36) இலங்கை மனித ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
முல்லைத்தீவு, முறிகண்டி, செல்வபுரம், இல 99 என்ற முகவரியைச் சேர்ந்த இவர் பிரதேச செயலகம் மற்றும் மாங்குளம் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு எதிராக இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார். உரிமை மீறலில் சம்பந்தப்பட்டுள்ள அதிகாரிகளாக ஒட்டுசுட்டான், பிரதேச செயலாளர், டி.அகிலன், மாங்குளம், சமுர்த்தி அபிவிருத்தி வங்கி, முகாமையாளர் ஆகியோரை குறிப்பிட்டுள்ளார். 2019ம் ஆண்டு இம்மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது.
‘நல்லாட்சி காலத்தில் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக செயற்பட்ட தேசியப்பட்டியல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா அத்துமீறி காடழிப்பில் ஈடுபட்டமை தொடர்பில் செய்தி அறிக்கையிட்டிருந்தேன். ஆனால் எனக்கு கிடைத்த அரச வீட்டுத்திட்டத்தை இடைநிறுத்தி அவரது அடிவருடிகளான புதுக்குடியிருப்பு பிரதேச சபையினூடாக அனுமதியற்ற கட்டடம் அமைப்பதாகக் கூறி வழக்கு தொடர்ந்தனர். இன்றுவரை வீட்டுத்திட்ட மிகுதி பணமும் கிடைக்கவில்லை.’ என்று தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தும் தீர்வு எட்டப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த மனித உரிமை மீறல் சம்பவம் தொடர்பில் ஆவண சாட்சியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். இதே பிரச்சினை தீர்வின்றி தொடர்ந்து கொண்டிருப்பதாகவும், விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இந்த முறைப்பாட்டை முன்வைப்பதனூடாக விரைவில் இந்த அநீதிக்கு நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் செய்தி அறிக்கையிடலின்போது எதிர்கொள்ளும் இவ்வாறான நிலைமைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காக முன்னிற்கும் அமைப்புகளும் அக்கறை காட்ட வேண்டும். இது முற்றுமுழுதான அரசியற் பழிவாங்கல். இதனால் சுதந்திரமாக ஊடகப் பணிகளை முன்னெடுக்க முடியாத ஒரு அச்சுறுத்தலான நிலைமையே காணப்படுவதாக பாதிக்கப்பட்ட தரப்பு தெரிவித்திருந்தது.
This post is also available in: English සිංහල