பிரபாகரனின் கல்லறையும் ஊடக அடக்குமுறையும்!

பிரபாகரனின் கல்லறையும் ஊடக அடக்குமுறையும்!

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் கல்லறைக்கு பின்னால் உள்ள பகுதியில் தனது வசிப்பிடம் அமைந்திருக்கும் ஒரே காரணத்திற்காக மிக மோசமான அடக்குமுறைகளை பாதுகாப்பு தரப்பினரால் எதிர்கொள்வதாக வல்வெட்டித்துறை, சிவன் கோவிலடி, ஆலடி ஒழுங்கையில் வசிக்கும் ஊடகவியலாளரான ஆர். மகிந்தன் (33) இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுக்கு கடந்த மார்ச் 7ம் திகதி, 2022 அன்று முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், இராணுவத்தினரும் தனக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக முறைப்பாட்டில் சுட்டிக்காட்டும் அவர், ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் தினமன்று தாம் பெரும் துன்புறுத்தலுக்குள்ளாவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். அத்துடன் தன்னை தொடர்ச்சியாக கண்காணித்து வரும் பாதுகாப்பு தரப்பினர் தனது ஊடகக் கடமைகளுக்கு இடையூறாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். மிக சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வுக்கு உதாரணமாக மாதகல் பகுதியில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்றை புகைப்படம் எடுக்க சென்ற Nவுளை இராணுவத்தினரால் மோசமாக மிரட்டப்பட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

‘எனது வசிப்பிடம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கல்லறைக்கு பின்னால் பகுதியில் அமைந்துள்ளதனால் ஒவ்வொரு மாவீரர் நினைவு தினம் வரும் பொழுதும் எம்மை சோதனை செய்கின்றார்கள். எமது உடமைகள், தொலைபேசிகளை பரிசோதிக்கின்றார்கள். அவ்வேளை எமது உறவினர்கள் எங்கள் வீட்டுக்கு வரவே அஞ்சுகின்றனர். நாம் வசிக்கும் வீட்டுக்கு முன்புறம் பற்றைக் காடுகள் படர்ந்துள்ளது. அவற்றை சுத்தம் செய்ய முடியாதுள்ளது. அவற்றை சுத்தம் செய்தால் எங்களை கடுமையாக மிரட்டுகின்றார்கள்’ என்று அந்த முறைப்பாட்டில் அவர் மேலும் குறிப்பிட்டிருக்கின்றார். இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு அறிவித்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒவ்வொரு மாதமும் நவம்பர் 26ம் திகதிக்கு அண்மித்த நாட்களில் இந்த தொந்தரவுகள் அதிகரித்து கொண்டே செல்கின்றன என்று அவர் துயருடன் குறிப்பிட்டார்.

மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டை செய்வதனூடாக தனது கைத் தொலைபேசி பறிமுதல் செய்யப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றும், அவரது இல்லத்துக்கு முன் உள்ள பற்றைக் காடுகள் நிரம்பிய காணியை துப்புரவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த முறைப்பாட்டினூடாக ஊடகவியலாளர் மகிந்தன் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரபாகரனின் கல்லறைக்கு அருகாமை பகுதியில் வசிப்பதனை ஒரே ஒரு காரணமாக வைத்துக் கொண்டு இந்த ஊடகவியலாளரையும் அவரது குடும்பத்தாரையும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கும் துன்புறுத்தலுக்கும் உட்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். பாதுகாப்பு தரப்பு வடக்கில் எவ்வாறு நுணுக்கமாக ஊடகவியலாளர்களுக்கும் பொதுமக்களுக்கு எதிராகவும் அடக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் முன்னெடுக்கின்றது என்பதற்கு ஊடகவியலாளர் மகிந்த எதிர்கொள்கின்ற இந்த அடக்குமுறை மற்றுமொரு சிறந்த உதாரணமாக உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக கைத்தொலைபேசி பறிமுதல் செய்யப்படுவது அடிப்படை மனித உரிமைகளை செயல்களில் ஒன்றாகும்.

ஒர்; ஊடகவியலாளருக்கு கையடக்க தொலைபேசி என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனை விபரிக்க தேவையில்லை. அவர் துறை சார்ந்த பல்வேறு தொடர்புகள், ஆதாரங்கள், தகவல்மூலங்கள் அதில் இருக்கக் கூடும். அதனை பறிமுதல் செய்து ஆராய்வது தொடர்ச்சியாக நடைபெறுவது என்பது அவரின் ஊடக செயற்பாட்டினை தடுக்கும் செயலாகவும் உள்ளது.

ஊடகப் பணியை சுதந்திரமாக அச்சமின்றி முன்னெடுக்க முடியாத ஓர் இக்கட்டான நிலையும் இதனால் அவருக்கு ஏற்படுகின்றது. நீதிமன்ற முன் அனுமதியோ, உரிமையாளரின் அனுமதியோ இன்றி கையகப்படுத்தப்படும் தொலைபேசியில் உள்ள தரவுகள் மற்றும் தகவல்கள் பறிமுதல் செய்யப்படுபவர்களால் களவாடப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட மாட்டாது என்பதற்கு எந்தவிதமான உறுதிப்பாடும் இங்கு இல்லை.

– ஊடகவியலாளர் ஆர்.மகிந்தன்

This post is also available in: English සිංහල