அரசியற் பின்னணியில் திட்டமிடப்படும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக பழிவாங்கல்கள்!

அரசியற் பின்னணியில் திட்டமிடப்படும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக பழிவாங்கல்கள்!

11 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஓர் சம்பவத்தை அடிப்படையாக வைத்து தமது மனித உரிமைகளை மீறும் நடவடிக்கைகள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவதாக கொக்குவில், கொக்குவில் கிழக்கு, பொற்பதி வீதி, 2ம் ஒழுங்கை, இலக்கம் 15 என்ற முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளரான த. வினோஜித் (36) கடந்த மார்ச் 7ம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

கண் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமிக்கு சிகிச்சைக்காக பணம் சேகரித்து கொடுத்த விவகாரம் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறித்து அதிருப்தியை வெளியிட்ட வினோஜித், பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக இந்த முறைப்பாட்டை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதுடன், உரிமை மீறலில் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளாக யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரை அவர் குறிப்பிட்டுள்ளார். முறைப்பாட்டில் தனிப்பட்ட மற்றும் அரசியல் காரணங்களுக்காக இந்த சம்பவம் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்விடயத்தில் தமக்கு நியாயம் தேவை என்றும் அவர் வலியுறுத்தியிருக்கின்றார். கடந்த ஜனவரி 16ம் திகதி இந்த சம்பவம் தொடர்பாக மீண்டும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ள நிலையில் இது முற்றிலும் மனித உரிமை மீறல் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

மகளுக்கு மருத்துவ உதவிக்காக பணம் சேகரிப்பு தருமாறு ஒரு நபரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய அந்த செய்தியை பிரசுரிக்க உதவியதன் பேரில், இந்த நிதிக்குற்றச்சாட்டுக்கள் எந்தவிதமான ஆதரமும் இன்றி தம்மீது முன்வைக்கப்படுவதாகக் குறிப்பிட்ட வினோஜித், சம்பவம் நடைபெற்று 11 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த சம்பவத்தின் அடிப்படையில் மீண்டும் அந் நபர் அவரை அச்சுறுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையில் இவ்விவகாரத்தை பொலிசாhர் கையில் எடுத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்டவரின் வங்கிக் கணக்கு இலக்கம் அனைத்தும் அவருக்கே சொந்தமாக இருக்கும் நிலையில் அந்த வங்கிக் கணக்கிலிருந்து எவ்வாறு என்னால் நிதி மோசடி செய்ய முடியும் என்று வினவிய வினோஜித், தனது கௌரவத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையிலும் ஊர்மக்கள் மத்தியில் அவதூறை ஏற்படுத்தும் வகையிலும் பொலிசார் திட்டமிட்டு செயற்படுவதாகவும் கூறுகின்றார். இந்த திட்டமிட்ட பழிவாங்கலின் பின்னணியில் அரசியல்வாதி ஒருவரின் தலையீடும் இருப்பதாகக் குறிப்பிடும் வினோஜித், நிதி உதவிக்கான செய்தியை பிரசுரிக்க உதவிய தனக்கும் தன் நண்பரான மற்றுமொரு ஊடகவியலாளருக்கும் எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இந்த செயற்பாடுகளில் இந்த குறிப்பிட்ட அரசியல்வாதியின் செயற்பாடும் உள்ளடங்கியிருப்பதாக அவர் கூறினார்.

ஊடகவியலாளர்களை எதிரியாகக் கருதும் இந்த அரசியல்வாதி இந்த சதித்திட்டத்தினை அரங்கேற்றுவதனூடாகவும், இவ்வாறான அச்சுறுத்தல்களை விடுப்பதனூடாகவும் ஒட்டுமொத்தமாக யாழ் ஊடகத்துறையை முடக்கி விட முயற்சி செய்கின்றார் என்று குறிப்பிடும் அவர், இதற்கு பாதுகாப்பு தரப்பும் உடந்தையாக இருப்பதாகவும் கூறினார்.

 

This post is also available in: English සිංහල