பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி சிவில் சமூக நிறுவனங்களை அடக்குமுறைக்குள்ளாக்கும் பாதுகாப்பு தரப்பு!
பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி சிவில் சமூக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகள் காரணமாக மக்களுக்கான பணிகளை ஆற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சிவில் சமூக செயற்பாட்டாளர் ஜே.யாட்சன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
மன்னார் மேற்கு, பள்ளிமுனை என்ற முகவரியைச் சேர்ந்த யாட்சன், இந்த அடக்குமுறைகள் தொடர்பில் பலமுறை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்த போதிலும் அது பற்றி மனித உரிமைகள் ஆணைக்குழு எந்தவிதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்று தெரிவித்தார். மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அவரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டில் அவர், மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு எதிராக இந்த முறைப்பாட்டை அளிப்பதாகத் தெரிவித்திருக்கின்றார்.
கொழும்பு, மற்றும் வவுனியா, மன்னார் பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு எதிராக அவர் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
காணாமற்போனோர் விவகாரம், காணி விவகாரம் போன்ற மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு மன்னாரில் இயங்கிவரும் தனது அமைப்புக்கு எதிராக திட்டமிட்ட அடக்குமுறைகளும், அச்சுறுத்தல்களும் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரிக்க உரிமை உள்ளது என்று கூறி பலமுறை நான்காம் மாடிக்கு தம்மை அழைத்து பல மணி நேர விசாரணைகள் நடத்தப்படுவதாகவும், பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனம் ஒன்றில் எமது அமைப்பை பதிவு செய்யுமாறும் பலவிதமான அழுத்தங்கள் தொடர்ச்சியாக வழங்கப்படுவதாக யாட்சன் குறிப்பிட்டார்.
சிவில் சமூகத்திற்காக இயங்கிவரும் எம்மைப் போன்ற நிறுவனங்களை இவ்வாறு அச்சுறுத்தி முடக்க முயற்சிப்பது ஆரோக்கியமானதல்ல என்று அவர் குறிப்பிட்டார். தமது நிறுவனம் மட்டுமன்றி வடக்கு கிழக்கில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பொதுவாகவே இவ்வாறான அடக்குமுறைகளையும், பிரச்சினைகளையும் எதிர்கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இந்த அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் நிதி விபரங்களை அடிக்கடி விசாரித்தல், நிதி எங்கிருந்து கிடைக்கின்றது என்பதனை துருவி துருவி விசாரித்தல், அலுவலகத்தில் திடீர் சோதனைகளை பலமுறை நடத்துதல் என்று பாதுகாப்பு தரப்பு அத்துமீறி செயற்படுகின்றது என்று சுட்டிக்காட்டிய யாட்சன், தமது அமைப்பின் மீது குற்றம் எதனையும் சுமத்த முடியாத நிலையில், 4ம் மாடிக்கு மேலதிக விசாரணைகளுக்கென அழைப்பதும் பல மணித்தியாலங்கள் விசாரணை என்று இருக்க சொல்வதும் வழமையான நிகழ்வாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிட்டு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே அவரின் கோரிக்கையாகும். இந்த அடக்குமுறைகள் காரணமாக பணிகளை முன்னெடுத்துச் செல்வது சிரமமான காரியமாக இருப்பதாகவும், பணியாற்றுவதற்கு மனநிலை ஒத்துழைக்க மறுத்தல், குடும்ப உறவுகள் பாதுகாப்பு தொடர்பில் அச்சமடைந்திருத்தல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதாக யாட்சன் கூறினார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவை தவிர பல தூதரகங்களுக்கும், மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்புகள் பலவற்றுக்கும் இந்த அடக்குமுறை தொடர்பில் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்ட போதிலும், இது வரை எந்தவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாத நிலையே உள்ளதாக யாட்சன் கவலையுடன் தெரிவித்தார். முறைப்பாடுகள் பலவற்றையும் அடக்குமுறைகளின் விபரங்களையும் பெற்றுக் கொள்ளும் இவ்வாறான அமைப்புகள் அடுத்தகட்டமாக முன்னெடுக்கக் கூடிய வேலைத்திட்டங்களையோ, தீர்வுகளையோ முன்வைப்பதில்லை என்றும் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
எம்மைப் போன்ற சிவில் அமைப்புகள் மீதான உரிமை மீறல்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இனியும் காலந்தாழ்த்தாது விசாரித்து உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
– சிவில் சமூக செயற்பாட்டாளர் யாட்சன்
This post is also available in: English සිංහල