ஊடகப் பணியை தடுத்து நிறுத்திய அரச நிறுவனமும் அதிகாரியும்!

சுயாதீன ஊடகவியலாளர் தங்கராசா காண்டீபன்

யாழ்ப்பாணம், குடத்தனை, அம்பன் என்ற முகவரியைச் சேர்ந்த ஊடகவியலாளரான தங்கராசா காண்டீபன் (42) செய்தி சேகரிக்கச் சென்ற வேளை எதிர்நோக்கிய மனித உரிமை மீறல் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். கடந்த மார்ச் 07ம் திகதி இந்த முறைப்பாட்டை அவர் செய்துள்ளார்.
மீன்பிடி அமைச்சுக்கு எதிராகவும், உரிமை மீறலில் சம்பந்தப்பட்ட அதிகாரியாக கே.என்.தயாநந்தாவுக்கு எதிராகவும் அவர் முறையிட்டிருக்கின்றார்.

கடந்த பெப்ரவரி முதலாம் திகதி வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற மீனவர்கள் போராட்டத்தின் போது செய்தி சேகரித்துக் கொண்டிருந்த வேளை, செய்தி சேகரிக்க விடாமல் அவரை தடுத்தமை, கடுமையாக அச்சுறுத்தியமை தொடர்பிலேயே அவர் இந்த முறைப்பாட்டினைப் பதிவு செய்திருக்கின்றார். இதனால் தனக்கு பாதுகாப்பு தருமாறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அவர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் கண்கண்ட சாட்சிகள் எதனையும் குறிப்பிடாத நிலையில், இந்த முறைப்பாட்டை முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல்கள் உள்ளதாகவும், ஆயினும் தற்போது நிலவும் ஊடக அடக்குமுறைக்கு மத்தியில் தனது சுய பாதுகாப்பு தொடர்பில் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளதாகவும் காண்டீபன் தெரிவித்தார்.

சுயாதீன ஊடகவியலாளராகக் கடமையாற்றும் இவர், இச்சம்பவம் தொடர்பில் தமது உயர் அதிகாரிகளிடமும் முறைப்பாடு செய்யவில்லை என்று தெரிய வருகின்றது. முறைப்பாடுகள் அளித்தாலும் எந்தவிதமான பலனும் ஏற்படாது என்று தான் கருதுவதாகக் குறிப்பிட்ட அவர், மீண்டும் இந்த அரச அதிகாரிகளுடனேயே ஊடகப் பணியை ஆற்ற வேண்டியுள்ளதனால் தனது பாதுகாப்பு பற்றி அச்சமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

சட்டவிரோதமான செயற்பாடுகள் தொடர்பில் செய்திகளை சேகரித்து வெளிப்படுத்தும் செயற்பாட்டின் போது தாம் நன்கு அடையாளப்படுத்தப்படுவதனால் சமூக விரோதிகளின் அச்சுறுத்தல் தமக்கு எப்பொழுதும் உள்ளதாகவும் அவர் கூறினார். இதனால் ஊடகப் பணிகளை செய்யும் போது அதிகாரிகள் முதல் சிற்றூழியர்கள் வரை தன்னை நன்கு அறிந்துவைத்துள்ளனர் என்றும், இதனால் பிரச்சினைகளை எதிர்நோக்கும் வாய்ப்பும் தனக்கு அதிகமாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இதனாலேயே மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சுய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தாம் வேண்டுகோள் விடுத்ததாகவும் அவர் கூறினார்.

This post is also available in: English සිංහල

More News

மண் சரிவு அபாயத்தினால் அல்லலுறும் தெபெத்தை மக்கள்.

மண் சரிவு அபாயத்தினால் அல்லலுறும் தெ...

Read More

2016.11.29 அன்று சமர்ப்பிக்கப்பட்ட பொது மனுக் குழுவின் 6வது அறிக்கை

2016.11.29 அன்று சமர்ப்பிக்கப்பட்ட பொது மன...

Read More

பகிடிவதை புரியும் வங்கி முகாமையாளர்!

பகிடிவதை புரியும் வங்கி முகாமையாளர்!...

Read More