மீள்குடியேறிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் வேண்டும்!

மீள்குடியேறிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் வேண்டும்!

வவுனியா காஞ்சிரமோட்டை வடக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட கிராமத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக நவரத்தினம் கபிலன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
வவுனியா, யாழ்வீதி, சே.யோ. ஒழுங்கை, இல 10 என்ற முகவரியைச் சேர்ந்த இவர், வனவளத்திணைக்களத்திற்கு எதிராகவும், மாவட்ட வனவள அதிகாரி, வவுனியா வனவள திணைக்களம் ஆகிய அதிகாரிகளுக்கு எதிராகவும் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்படட காஞ்சிரமோட்டை கிராம மக்கள் யுத்தத்திற்கு முன்னர் பல்வேறு வசதிகளுடன் வாழ்ந்த நிலையில் யுத்தத்தால் இடம்பெயர்ந்து வெவ்வேறு இடங்களில் வாழ்ந்தனர். இந்நிலையில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்பு அவர்கள் மீள்குடியேறிய போதிலும் வனவள திணைக்களம் அவர்களுக்கு அனுமதி மறுத்ததது. எனினும் அவர்கள் குடியேறிய நிலையில் அடிப்படை வசதிகளை செய்து வாழ அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் மின்சார வசதியைப் பெற மக்களுக்கு அனுமதி மறுத்த நிலையில் மின்சாரத்தை பெற முடியாமமல் அவர்கள் தவித்து வருகின்றனர். அத்துடன் இதுவரை அவர்களது வாழ்விடத்திற்கான ஆவணங்களை வழங்காமல் அவர்களை வெளியேற்றுவதற்கான முயற்சியே இடம்பெற்று வருவதாக முறைப்பாட்டில் கபிலன் தெரிவித்திருக்கின்றார்.

2018ம் ஆண்டு முதல் இப்பகுதி மக்களுக்கு எதிராக இடம்பெற்று வரும் இந்த மனித உரிமை மீறல் தொடர்பில் மக்கள் பிரதேச செயலர்களிடம் அறிவித்துள்ளனர். காணிக்கான ஆவணங்கள் வழங்கப்படாது இம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்றும் கபிலன் குறிப்பிட்டுள்ளார்.

இனம் மற்றும் அரசியற்கொள்கை ஆகிய காரணங்களினால் இந்த மக்களின் உரிமைகள் இவ்வாறு அரச அதிகாரிகளினால் மீறப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், மக்கள் தமது வாழ்விடத்தில் தொடர்;ந்து வாழ அனுமதிக்குமாறு வனவளத்திணைக்களத்திற்கு ஆவண செய்யுமாறும், அந்த பகுதி சார்ந்த காணி ஆவணங்களை மக்களுக்கு வழங்க தலையிடுமாறும் கபிலன் விசேட வேண்டுகோளை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் விடுத்துள்ளார்.

வனவளத்தி;ணைக்கள அதிகாரிகள் இவ்வாறு இன பாரபட்சத்துடன் நடந்துகொள்வது தொடர்பில் அப்பகுதி மக்கள் பெரும் அதிருப்தியுற்ற நிலையில் உள்ளனர் என்றும் தாம் பூர்வீகமாக வாழ்ந்து இடத்தில் மீளக்குடியேறி வாழ முற்படும் மக்களுக்கு முட்டுக்கட்டைப் போடும் இவ்வாறான செயற்பாடுகள் இன விரிசலையும், தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்களையும் ஏற்படுத்தி ஆரோக்கியமற்ற சூழலையே உருவாக்கும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது.

– நவரத்தினம் கபிலன்

This post is also available in: English සිංහල